பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

63

பித்தார். ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியப் பெருமானிடம் வந்து முதல் இதழுக்கு ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்படியே ஆசிரியரும் ஒரு கட்டுரை எழுதித் தந்தார். அதோடு என்னையும் அந்தப் பத்திரிகையில் பணியாற்ற அனுப்பி வைத்தார். அதுமுதல் கலைமகளின் தொடர்பு எனக்கு இருந்து வருகிறது. ஆசிரியர் சில நூல்களைக் கலைமகளில் அனுபந்தமாக வெளியிட்டார்கள். தம்முடைய அனுபவங்களையும், புலவர்களின் வரலாறுகளையும் கலைமகளில் கட்டுரையாக எழுதத் தொடங்கினர். அதனால் கலைமகளின் பெருமை உயர்ந்தது. ஆசிரியப் பெருமான் உரைநடையில் பல நூல்களை எழுதக் கலைமகள் இவருக்கு ஒருவகையில் தூண்டுகோலாக இருந்தது என்றும் சொல்லலாம்.

1933-ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் முதல் பாகம் வெளியாயிற்று.


சதாபிஷேகம்

ஆசிரியப் பெருமானின் எண்பதாவது ஆண்டு நிறைவு நெருங்கிக்கொண்டிருந்தது. சஷ்டியப்த பூர்த்தியைச் சரியாக நடத்தவில்லை, இந்த விழாவையாவது சிறப்பாக நடத்தவேண்டுமென்று அட்வகேட்டாக இருந்த கே. வி. கிருஷ்ணசாமி ஐயர் எண்ணினார். அதற்கென ஒரு குழுவை அமைத்துக்கொண்டார். இந்த விழா மிகச் சிறப்பாகப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. ஸர் முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். ஆசிரியப் பெருமானின் திருவுருவப் படம் ஒன்றைப் பல்கலைக்கழக மண்டபத்தில் திறந்து வைத்தார்கள். தலைநகரில் மட்டுமன்றித் தமிழ்நாட்டின் பல பாகங்களிலும், பர்மா, இலங்கை ஆகிய இடங்களிலும்கூட ஆசிரியப் பெருமானுடைய சதாபிஷேக விழா நடைபெற்றது.

1934-ஆம் வருஷம் ஜனவரி மாதம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் இரண்டாவது பாகம் வெளியாயிற்று. இந்தப் பாகம் பிள்ளையவர்களிடம் ஆசிரியர் பாடம் கேட்கத் தொடங்கியது முதல் புலவர் பெருமானின் இறுதிக் காலம் வரையிலான நிகழ்ச்சிகளை விளக்குகின்றது.


ராஜாஜியின் பாராட்டு

கலைமகளில் ஒரு சமயம் ‘பிச்சைப் பாட்டு’ என்ற தலைப்பில் ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஸ்ரீ ராஜாஜி அவர்கள்