பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

65

அப்பதிப்பில் இருந்தன. அது வெளியாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. புத்தகம் கிடைக்காமல் இருந்தது. எனவே குறுந்தொகையை விரிவான முறையில் அச்சிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. அதற்கு வேண்டிய ஆராய்ச்சிகளும் குறிப்பு எழுதும் வேலையும் நடந்துகொண்டிருந்தன.

குறுந்தொகைக்கு மிக விரிவான முறையில் உரையை எழுதினார். இவர் பதிப்பித்த நூல்களில் இதுவே மிக விரிவாக அமைந்தது. நூலாராய்ச்சி என்ற பகுதியை நூறு பக்கங்களில் எழுதியிருக்கிறார், பதவுரை, பொழிப்புரை, விசேட உரை, மேற்கோளாட்சி, ஒப்புமைப் பகுதி, பாடபேதங்கள் என்பனவும், விரிவான அகராதியும் இணைந்த பயனுள்ள பதிப்பு இது. இதை வெளியிட்டதில் இவர் ஒருவகை மனநிறைவு பெற்றார். இது 1937-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியாயிற்று.


குமரகுருபரர் பிரபந்தங்கள்

திருப்பனந்தாளில் காசிமடத்தின் தலைவராக இருந்த சாமிநாதத் தம்பிரான் ஆசிரியரிடம் பெரும் மதிப்பு உடையவர். காசிமடத்தின் முதல்வராகிய குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்களை ஆசிரியர் பதிப்பித்து வெளியிடவேண்டும் என்ற அவா அவருக்கு இருந்தது. தம் விருப்பத்தை ஒரு முறை ஆசிரியரிடம் தெரிவித்தார். -

அதுமுதல் ஆசிரியர் அப்பிரபந்தத்திற்குரிய குறிப்புகளை எழுதலானார். விரிவான முறையில் முகவுரை, அடிக் குறிப்போடு அதனை அச்சிடத் தொடங்கினார். 1939-ஆம் ஆண்டு குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்கள் வெளிவந்தன.

அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு ஆசிரியர் ஒருமுறை திருப்பனந்தாள் சென்றிருந்தார். சாமிநாதத் தம்பிரான் ஆசிரியருக்காகத் தனி இருக்கை ஏற்பாடு செய்திருந்தார். ஆசிரியர் வந்திருப்பது தெரிந்து பல புலவர்கள் வந்து இவருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படி நாள் போவதே தெரியாமல் பொழுது போய்க்கொண்டிருந்தது.


காசிமடத்தின் தலைவருடைய அன்பு

ஒரு நாள் மாலை 7 மணி இருக்கும். ஆசிரியப் பெருமான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நானும் வேறு சில மாணவர்களும் பக்கத்தில் அமர்ந்திருந்தோம். கொல்லைப் புறக் கதவின் தாழ்ப்பாள் ஒசைப்பட்டது. யார் உள்ளே வருகிறார்கள் என்பது