தமிழ்த் தாத்தா
67
காலம் நான்கு மணி இருக்கும். எழுந்து கீழே வரும்போது தவறி விழுந்துவிட்டார். முழங்காலில் அடிபட்டு இரத்தம் ஒழுகிற்று. மயக்கமடைந்துவிட்டார். இவரைத் தூக்கி வந்து ஒரு நாற்காலியில் அமர வைத்தார்கள். பின்புதான் நினைவு வந்தது. காலில் வலி அதிகமாக இருந்தது. சில மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். எக்ஸ்ரே எடுக்கப்பெற்றது. அதில் எலும்பு முறிவு இருப்பது தெரிந்தது.
நோயினால் படுத்த படுக்கையில் இருந்த நிலையிலும் ஆசிரியப் பெருமான் பாடம் சொல்வதை விடவில்லை. எந்த வகையான இளைப்பு இருந்தாலும் பாடம் சொல்லும்போது அந்த இளைப்பு இவருக்கு மறந்துபோகும்.
அப்போது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்தது. சென்னையில் உள்ளவர்கள் எல்லாம் குடும்பத்தைக் கலைத்துக்கொண்டு வெளியூர்களுக்குப் போனார்கள். அந்தச் சமயத்தில் சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றத்தில் உள்ள திருவாவடுதுறை மடத்திற்குச் சொந்தமான ஒரு வீட்டில் ஆசிரியப் பெருமான் போய்த் தங்கி இருக்கலாம் என்று தீர்மானம் செய்தார்கள். அவ்வாறே ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஆசிரியர் காரில் ஏறிப் புறப்பட்டார். புறப்பட்டபோது அவர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.
'கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே' என்ற திருவாசகத்தைச் சொல்லிப் புறப்பட்டார். "திரும்பவும் நான் இந்த வீட்டுக்கு வருவேனா?" என்று கேட்டுக்கொண்டே புறப்பட்டார். மாலை நான்கு மணிக்குக் கார் திருக்கழுக்குன்றம் போய்ச் சேர்ந்தது. தம்முடைய புத்தகங்களையும், ஏட்டுச் சுவடிகளையும் விட்டுவிட்டு வந்துவிட்டதை ஆசிரியப் பெருமான் விரும்பவில்லை. குழந்தையைப் பிரிந்த தாய்போல வருந்தினர். அந்த வேதனையை உணர்ந்த இவருடைய புதல்வர் அவற்றையெல்லாம் திருக்கழுக்குன்றத்திற்கே கொண்டுபோய்ச் சேர்த்தார். பத்து மாட்டு வண்டிகளில் அந்தப் புத்தகங்கள் எல்லாம் வந்து சேர்ந்தன.
திருக்கழுக்குன்றம் வந்த பிறகு உடல் நலத்தில் கொஞ்சம் முன்னேற்றம் உண்டாயிற்று. எழுந்து உட்காரத் தொடங்கினார்.
என்னுடைய குடும்பம் அப்போது மோசூரில் இருந்தது. என் தந்தையாருக்கு உடம்பு சரியில்லை என்று கடிதம் வந்ததால் நான் மோசூருக்குப் போவதற்கு முன் திருக்கழுக்குன்றம் சென்றேன். ஆசிரியருடன் நெடுநேரம் இருந்தேன். தமிழ் நூல்களைப்பற்றி இவர் பேசிக்கொண்டிருந்தார். கம்பராமாயணம், தேவாரம் ஆகியவற்றை நல்ல முறையில் அச்சிட வேண்டுமென்ற ஆசை