பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழ்த் தாத்தா

கேட்டால்தான் தம் குமாரருடைய ஆவல் நிறைவேறும் என்று ஐயரின் தந்தையார் நினைத்தார். அவர் சந்தித்த புலவர்கள் யாவரும் அந்தக் கருத்தையே வற்புறுத்தினார்கள்.

அக்காலத்தில் நந்தனார் சரித்திரத்தை இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் வாழ்ந்து வந்தார். மாயூரத்திற்குச் சென்று மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படிப்பதோடு, ஒழிந்த வேளைகளில் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசையையும் பயின்று வரலாம் என்ற எண்ணம் ஐயரின் தந்தையாராகிய வேங்கடசுப்பையருக்கு உண்டாயிற்று. அப்படியே மாயூரத்துக்கு ஐயரை அழைத்துச் சென்றார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயில ஏற்பாடு செய்தார். அதோடு காலை வேளைகளில் கோபால கிருஷ்ண பாரதியாரிடம் இசை பயிலவும் ஏற்பாடு செய்தார். சில நாட்களில் ஐயர் பாரதியாரிடம் இசை பயில்வதை அறிந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை இவரிடம், “இசையில் மனம் சென்றால் வேறு எதிலும் மனம் செல்லாது” என்று குறிப்பிக்கவே, ஐயர் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை பயில்வதை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் அவர் பழக்கத்தை மட்டும் விடவில்லை.

அதனால் கோபாலகிருஷ்ண பாரதியார் சரித்திரத்தையும் பிற்காலத்தில் எழுதினார். நந்தனார் சரித்திரத்தைப் பாடிப் பழகியவர் ஐயர். அதை எழுதியவர் அழகுடையவராக இருப்பார் என்று எண்ணியிருந்தார். ஆனால் நேரில் பார்த்தபோது பாரதியாருடைய உருவம் வேறு விதமாக இருந்தது. இறுகிய கழுத்தும் சப்பைக் காலுமாகக் காட்சி அளித்தார். அவரைக் கண்டு முதலில் வியப்படைந்தாலும் பிறகு, கோணலான யாழிலிருந்துதானே நல்லிசை பிறக்கிறது? அதுபோல இந்தப் பெருமானிடமிருந்து இன்னிசை தோன்றுகிறது என்று எண்ணிக்கொண்டாராம்.

பலர் வரலாறுகள்

தனித்தனியே சிலருடைய வரலாறுகளை நூல் வடிவில் எழுதியதையன்றிக் கட்டுரை வடிவிலும் பலருடைய வரலாறுகளை எழுதியுள்ளார். புதுக்கோட்டையில் திவானாக இருந்த சேஷையா சாஸ்திரியார், பேராசிரியர் பூண்டி அரங்கநாத முதலியார், இசைப் புலவர் ஆனை ஐயா, சுப்பிரமணிய பாரதியார் முதலிய பலரைப் பற்றியும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

சுப்பிரமணிய பாரதியாருக்கும் ஐயருக்கும் நல்ல பழக்கம் உண்டு. பாரதியார் தாம் நடத்திய ‘இந்தியா' என்னும் பத்திரிகை யில் ஐயரைப்பற்றிச் சிறப்பித்து எழுதியிருக்கிறார். ஐயருக்கு மகாமகோபாத்தியாயப் பட்டம் கிடைத்தபோது சென்னை மாநிலக்