பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைநடை

75

கல்லூரியில் ஐயரைப் பாராட்டி ஒரு விழா நடைபெற்றது. அதற்குப் பாரதியாரும் சென்றிருந்தார். அப்பொழுதே அவர், ‘செம்பரிதி ஒளிபெற்றான்’ என்று தொடங்கும் பாடலுடன் மூன்று பாடல்களைப் பாடினார். பாரதியார் பாடல் தொகுதியில் 'மகாமகோபாத்தியாய வாழ்த்து’ என்ற தலைப்பில் அந்தப் பாடல்கள் உள்ளன. அவற்றை முதலில் பென்சிலில் எழுதிய தாளை நான் பார்த்திருக்கிறேன்.

சுப்பிரமணிய பாரதியாருடைய விழா ஒரு முறை சென்னைக் காங்கிரஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பாரதி “யாரைப்பற்றிப் பேசவேண்டுமென்று அமரர் ராஜாஜி ஐயரைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே சென்று ஐயர் பேசினார். அதைக் கேட்ட பிறகு ராஜாஜி, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று விசுவாமித்திரர் சிறப்புப் பெற்றதுபோல ஐயரவர்கள் வாயால் பாரதியின் பெருமை அதிகமாயிற்று” என்று சொன்னார். அக்காலத்தில் சில புலவர்கள் பாரதியாரைப் பெருங் கவிஞராக மதிப்பதில்லை. அந்த எண்ணம் ராஜாஜியின் மனத்தில் இருந்திருக்க வேண்டும். ஐயர் பாரதியாரைப் புகழ்ந்து பேசியபோது ராஜாஜிக்குப் பேருவகை உண்டானது இயல்புதானே? அவருக்குப் பாரதியாரின் பெருமையும் தெரியும்; ஐயரின் பெருமையும் தெரியும். பாரதியார் தமிழ் மக்களுக்குப் புதிய அணிகலன்களைச் செய்து அணிந்தவர். ஐயரோ பழைய அணிகலன்களைக் கண்டெடுத்துத் துலக்கிப் புனைந்தவர். இந்த இருவருடைய தொண்டுகளையும் நன்கு உணர்ந்த ராஜாஜி, ஐயரின் வார்த்தைகளைக் கேட்டதும் பேரானந்தம் கொண்டார். ஐயர் சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றி எழுதிய கட்டுரை அவருடைய நூல் தொகுதி ஒன்றில் இருக்கிறது.

பூண்டி அரங்கநாத முதலியார் மாநிலக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்தவர், தமிழிலும் வல்லவர், தமிழ்க் கவிஞர். அவர் கச்சிக் கலம்பகம் என்ற நூலை இயற்றினர். அக்காலத்தில் ஐயர் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். பூண்டி அரங்கநாத முதலியார் தம் நூலைப் பல புலவரைக்கொண்டு அரங்கேற்றினர். அரங்கேற்றம் சில நாட்கள் நடந்தன. ஐயர் தம் பதிப்பு வேலையை முன்னிட்டுச் சென்னைக்கு வரும்போதெல்லாம் பூண்டி அரங்கநாத முதலியாரைச் சந்திப்பது வழக்கம். அந்தச் சமயங்களில் இவரும் கச்சிக் கலம்பக அரங்கேற்றத்தில் கலந்து கொண்டு பல பாடல்களுக்கு விளக்கம் கூறினார். பூண்டி அரங்கநாத முதலியாருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவருடைய வரலாற்றை ஐயர் எழுதியிருக்கிறார். அதில் இந்தச் செய்திகளெல்லாம் வருகின்றன.