பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தமிழ்த் தாத்தா


ஐயரவர்களின் முன்னோர்களில் ஒருவர் முன் குறிப்பிட்ட கனம் கிருஷ்ணையர் என்ற இசைப் பெரும் புலவர். ஐயர் அவரைப் பார்த்திராவிட்டாலும் அவரைப்பற்றிய செய்திகளையெல்லாம் தம் தந்தையார் வாயிலாகக் கேட்டிருந்தார். அதனால் அவருடைய வரலாற்றையும் எழுதினார். மிகச் சிறிய விஷயத்தையும் சுவைபட எழுதும் ஆற்றல் மிக்கவர் ஐயர்.

கனம் கிருஷ்ணையர் நாள்தோறும் சிவபூஜை செய்பவர். ஒரு முறை பூஜை செய்ய அவருக்கு வில்வம் கிடைக்கவில்லை. அவர் அப்போது கிடைத்த கீரையைக்கொண்டே அர்ச்சனை செய்தாராம். வில்வம் இல்லை என்பதற்காகப் பூஜையை நிறுத்தக்கூடாது என்று எண்ணினார் அப்பெரியார். காளிதாஸன் வெற்றிலைக் காம்புகளைக் கொண்டே அம்பிகையைப் பூசித்த செய்தி இங்கே நினைவுக்கு வருகிறது.

நடை

ஐயர் எழுதிய கட்டுரைகளின் நடை தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடை. எந்தச் சொல்லுக்கும் அகராதியைத் தேட வேண்டிய அவசியம் இராது. ஆழமான நீர் நிலையில்தானே தெளிவு இருக்கும்? சிறிய சிறிய வாக்கியங்களாக அமைத்திருப்பார். மனிதனுடைய இதய ஆழத்தில் தோன்றும் உணர்ச்சியலைகளை விவரித்திருப்பார். புறத்தோற்றத்தையும் சிறப்பாக வருணித்திருப்பார். தம்முடைய ஆசிரியரைப்பற்றி இவர் கூறுவதைக் கேட்கலாம்.

‘காட்சிக்கு எளிமையும் பணிவும் சாந்தமும் இவர்பால் உள்ளன என்பதை இவரைக் கண்டவுடன் அறியலாம். ஆழ்ந்த அறிவும் இணையற்ற கவித்துவமும் வாய்க்கப் பெற்றிருந்தும், அலைகளெல்லாம் அடங்கி ஒலியற்றிருக்கும் ஆழ்ந்த கடலைப்போல் அறிவின் விசித்திர சக்தியெல்லாம், கண்டவுடன் அறிய முடியாவண்ணம் அடங்கியிருக்கும் தோற்றம் உடையவராக இவர் இருந்தார்.’

அவருடைய சிவபக்தியை மிக விரிவாக எழுதியிருக்கிறார். ஐயரும் பெரிய சிவபக்தர். ஆதலால் தம் ஆசிரியரின் சிவபக்தியைப் பற்றி அவர் எழுதுவது இயல்புதானே?

அவர் கவிதை இயற்றும் முறையைச் சொல்லுகிறார்:

"இவர் பெரும்பாலும் யோசித்துக்கொண்டேயிருக்கும் இயல் புடையவர். பாடவேண்டிய விஷயங்களை ஒரு வகையாக மனத்தில் ஒழுங்குபடுத்திக்கொண்டு பின்பு பாட ஆரம்பித்தால் ஒரே மூச்சில் நூற்றுக்கணக்காகப் பாடுவார். செய்யுட்களைச் சொல்லிக் கொண்டே வருகையில் மனப்பாடமான நூல்களில் உள்ள செய்யுட்