பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்களில் உள்ள முகவுரையே அவருடைய உரைநடை வளத்துக்குச் சான்றுபகரும். அவற்றோடு மேலே கண்ட வகைகளில் அவர் எழுதிக் குவித்தவை தமிழுக்குக் கிடைத்த களஞ்சியம் ஆகும்.

பண்டை நூற்பதிப்பு, வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி, அநுபவக்அநுபவக் கட்டுரைகள் என்று பல துறைகளில் தம்முடைய இலக்கியப் பணியைச் செய்த அப்பெருமான் எண்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்து 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்தார். நினைவு தெரிந்தது முதல் தமிழைப் பயின்றும், பயிற்றுவித்தும், பிறகு பண்டை நூல்களைப் பதிப்பித்தும் தமிழுக்கு வளம் ஊட்டி வாழ்ந்த அப்பெரியாருடைய வரலாறு பல பல அரிய உண்மைகளை வெளியிடுகிறது.

அப்பெருமானுடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமே இந்த வெளியீடு. அவருடைய வாழ்க்கையில் மாணவப் பருவம், ஆசிரியத் தொண்டு, பதிப்புத்துறை, எழுத்துப்பணி என்ற பகுதிகள் அமைந்தன. அவற்றையெல்லாம் ஒருவாறு சுருக்கமாக இந்த நூலில் எழுதியிருக்கிறேன். இறுதியில் அவருடைய உரைநடையைப் பற்றிய பகுதியையும் எழுதிச் சேர்த்திருக்கிறேன்.

கவியரசர் பாரதியார் ‘பொதிய மலைப் பிறந்த தமிழ் வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில், துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே!’ என்று ஐயரவர்களைப்பற்றிப் பாடினார். ஆம், அப்பெருமான் என்றும் வாழ்வார். தமிழுள்ள காலமெல்லாம் அவர் புகழ் நின்று நிலைக்கும்.

4—11—1982

கி. வா. ஜகந்நாதன்