8
திருமணம் நிகழ்த்தும் ஆசிரியர் உளங்கனிந்து பாடுதல் வேண்டும். (அங்ஙனம் பாடுதற்குரிய பாடல்கள் இந்நூலில் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. வைணவ சமயத்தவர் திருமணத்திற்குப்பொருத்தமான பாடல்கள் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளன.) இவ்வழிபாடு முடிந்ததும் குழுமியுள்ள பெரியோர்களால் வாழ்த்தித் தரப்பெற்ற மங்கலநாணை மணமகன் மணமகளுக்கு அணிதல் வேண்டும். அப்பொழுது இன்னிசை முழக்கமும் "மனமக்கள் வாழ்க! மணமக்கள் வாழ்க!” என அன்பர்களின் வாழ்த்தலும், மஞ்சள் கலந்த மலரும் தூவுதலும் நிகழும்.
பின்னர் மணமக்கள் மாலைமாற்றிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் தம் மாலைகளை மூன்று முறை மாற்றிக் கொள்வதால் மணமக்களின் மன ஒருமைப்பாட்டினை மக்கள் அறிந்து கொள்கின்றனர். மாலை மாற்றுதல் முடிந்தபின்னர் மணமகன் தன் வாழ்க்கைத் துணைவியின் கையைப்பிடித்துக் கொண்டு மணப்பந்தலைச் சுற்றிவருதல் வேண்டும். மாலை மாற்றுதலும் மணமகளைக் கைப்பிடித்து வலம் வருதலும் தமிழ்த்திருமணத்திற்கு இன்றியமையாதனவாக உள்ளன. அன்றியும் மணமக்களின் உடன் பாட்டினை அங்குக் குழுமியுள்ளோர் அறிந்து கொள்வதற்கும் சிறந்த சான்றாக விளங்குகின்றன. இச் செயல்களோடு திருமணம் முடிவு பெறுகின்றது. பின்னர்த் திருமணம் செய்து வைத்த ஆசிரியரும் ஆன்றோர்களும் சான்றோர்களும் மணமக்களுக்கு இல்வாழ்க்கையின் சிறப்பினை எடுத்துக் கூறி வாழ்த்துவர்.
குறிப்பு
தமிழ்த் திருமணம் மிகவும் சிக்கன முறையில் ஒரே வேளையில் நிகழுமாறு அமைத்திருப்பதால், காப்புக் கட்டல் காப்புக்களைதல், அரசாணிக்கால் நடுகல் முதலியன தேவை இல்லை. இவைகளையும் மண நிகழ்ச்சியில் சேர்த்துச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்பவர்களுக்குப் பின்வருமாறு செய்தல் வேண்டும்.