13
வாழையிலையில் அரிசியிட்டு இரண்டு கும்பங்களில் தண்ணீர் நிறைத்துப் பெரிய கும்பத்தை வலப்பக்கத்திலும் சிறிய கும்பத்தை இடப்பக்கத்திலும் வைத்துக் கும்பங்களை இறைவன் இறைவியாக நினைத்துத் தூப தீபங்காட்டி ஆசிரியர் பின்வரும் பாடல்களை ஓதிக்கொண்டு மணமக்களை வழிபாடு ஆற்றும்படி செய்தல் :
வலப்பக்கக் கும்பவழிபாடு
அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாங் வேறாம்
குறியது உடைத்தாய் வேதா கமங்களின் குறியிறந்தங்கு
அறிவினில் அருளால் மன்னி அம்மையோடு அப்பனாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்.
உலகெ லாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
இடப்பக்கக் கும்பவழிபாடு
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவமினி மேவ கிலாவே.
மணமகனுக்கு ஆடை அளித்தல்
ஒரு தட்டில் புத்தாடை, பூ, வெற்றிலைபாக்கு இவைகளை வைத்து ஆசிரியர் பின்வரும் திருப்பாடலை ஓதிக்கொண்டு மணமகனுக்குத் தருதல்.