பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
13. மாலை மாற்றல்

மணமகன் தன் கழுத்தில் அணிந்துள்ள மாலையைக் கழற்றி மணமகளுக்குச் சூட்டுதல். மணமகள் தன் கழுத்தில் உள்ள மாலையைக் கழற்றி மணமகனுக்குச் சூட்டுதல். அப்பொழுது ஆசிரியர் பின்வரும் பாடல்களை ஒதுவார்.

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினெடுஞ் சென்றவள் தன் குணத்தினை நன்கு அறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவிய ஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடு அரிசிலின்தென் கரைமேல்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே.

 

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடியாரவர் வான் புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.

 
14. பட்டம் கட்டுதல்

மணமகள் மணமகனின் இடப்பக்கத்தில் மாறி அமர்தல் வேண்டும். மணமக்களின் அம்மான்மார்கள் மணமக்களின் நெற்றியில் பட்டம் கட்டுதல். மாமிப்பட்டம், நாத்திப்பட்டம், கட்டுதலும் உண்டு. அப்பொழுது ஆசிரியர் பின்வரும் பாடலைப் பாடுவார்.