பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள் நிகழ்த்திய தமிழ்த் திருமணமுறை
தமிழ்த் திருமணம் கடவுட் கொள்கையோடு கூடியது. மணம் செய்துகொள்ளுவோர் பிற்கால வாழ்க்கையிலே தம்முடைய கடமையை உணர்ந்து நல்வழியிலே நடத்தல் வேண்டும் என்பதே இத்திருமணத்தின் முதல் நோக்கம். ஆதலால் திருமணத்தில் செய்யும் சடங்குகளின் பொருளைச் செய்விப்போரும் செய்துகொள்வோரும் உடனிருப்போரும் புரிந்துகொள்ளத்தக்க முறையிலே இந்தத் தமிழ்த் திருமணம் அமைக்கப் பெற்றுள்ளது. எனவே இத் திருமணத்தை நடத்தி வைப்போர் அங்குக் குழுமியுள்ள மக்களுக்கும் மணம் செய்துகொள்ளும் மணமக்களுக்கும் அவ்வப்போது விளக்கிக் கூறுதல் வேண்டும். அங்ஙனம் கூறத்தக்கவைகளுள் கீழ் வருபவை இன்றியமையாதனவாகும்.
1. மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் அழைப் பிதழ்களைத் திருமண மன்றத்தில் கூடியுள்ள பெரியோர்களுக்குப் படித்துக் காட்டுதல்.
2. வரவேற்பவர், மணமக்களின் பெற்றோர் முதலியவர்களின் பெயர்களைப் படித்துக் காட்டிக் கூடுமானால் அவர்களையும் அறிமுகப்படுத்துதல் நலம்.
8. மணமகன், மணமகள் ஆகிய இருவரையும் ஆங்குக் குழுமியுள்ளவருக்கு அறிமுகப்படுத்துதல்.
4. மணமக்களின் எண்ணம் அறிந்துகொள்ளும் வகையில் இந்தத் தமிழ்த் திருமணத்தைக் குறித்தும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கடமையைக் குறித்தும், மணமக்களுக்குச் சுருக்கமாக விளக்கிக் கூறுதல்.
திருமணம் செய்துகொள்வோர்க்கு அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவகையில் இந்தத் திருமணத்தை நடத்துதல் நலம்.