பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தமிழ் நாடும் மொழியும்


இராசேந்திரன்

இராசராசனுக்குப் பின்னர் அவன் மகனான இராசேந்திரன் சோழ நாட்டுப் பேரரசனானான். “தந்தையிற் சதமடங்கு தனயன்' என்னும் முதுமொழிக்கு எடுத்துக்காட்டாக இராசேந்திரன் விளங்கினான். இவன் காலத்தில் சோழ நாட்டின் பெருமை கடல்கடந்த நாடுகளுக்கெல்லாம் பரவியது. தூரகிழக்கு நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டின் சாயல் தென்படுவதற்குக் காரணமாக விளங்கியவன் இராசேந்திரனே.

அரியணை ஏறியதும் இராசேந்திரன் தன் படையெடுப்பைத் தொடங்கலானான். சோழப்படை கடலெனத்திரண்டது. ஈழம் நோக்கி விரைந்தது. ஈழத்தரசன் கைதியாகத் தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டான். ஈழ நாட்டுக் களஞ்சியமும் சோழரின் தலைநகர்க்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் பரசுராமன் கொடுத்த முடி சேரமன்னரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. தெற்கே வெற்றிக்கொடி நாட்டிய இராசேந்திரன் தன் எரி விழிகளை வடக்கு நோக்கித் திருப்பினான். அவ்வளவுதான்; சித்தியாசிரயனுக்குப்பின் வந்த முதலாம் சயசிம்மன் தோற்கடிக்கப்பட்டான். இந்தச் சண்டை கி. பி. 1021 இல் முயங்கி என்னும் இடத்தில் நடைபெற்றது. பின்னர் கலிங்கமும் மகாகோசலமும் பொன்னித் துறைவனின் கழல் பணிந்தன. இவற்றோடு சோழப்படை நிற்கவில்லை. கங்கைக் கரைநோக்கிச் சோழப்படை விரைந்தது. இராசேந்திரன் செல்லவில்லை. சென்ற சோழப்படை, வங்கத்தை ஆண்ட மகிபாலன், கோவிந்த சந்திரன் ஆகிய இரு மன்னர்களையும் தோற்கடித்தது. பின்னர் கங்கை நீர் நிரம்பிய குடங்களைத் தோற்ற வட நாட்டு மன்னர்தம் தலை மீது சுமத்திச் சோழப்படை தென்னகம் திரும்பியது. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரம் இந்த வெற்றியின்