பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

99


கொண்டு பயிற்சி பெற்றான். இவன் பட்டம் பெற்றதும் ஈழத்தில் ஏற்பட்ட குழப்பங்களை அடக்கி ஒடுக்கினான். கி. பி. 1044-இல் இவன் ஓர் அசுவமேதயாகம் செய்தான். இராசாதிராசன் செய்த போர்களுள் குறிப்பிடத்தகுந்தது கொப்பத்துப் போராகும். கொப்பத்துப்போர் நடந்த ஆண்டு கி. பி.1053 ஆகும். முதலாம் சோமேசுவரன் என்பவன் துங்கபத்திரைப் பேராற்றின்கண் உள்ள சோழநாட்டு எல்லைப்புறத்து நாடுகளைக் கவரலானான். செய்தியறிந்த சோழன் சிங்கமெனப் பொங்கினான். சோழப்படை விரைந்து வடபுலம் நோக்கிச் சென்றது. சோழப்படையும் சாளுக்கியப் படையும் கொப்பம் என்னும் இடத்திலே கலந்தன. கடலொடு கடல் பொருதுவது போலத் தோன்றியது. போரிலே இராசாதிராசன் உயிர் துறந்தான். ஆனால் உடனே களத்திலேயே அவன்றன் இளவல் இராசேந்திர சோழதேவன் முடிபுனைந்து சோழப்படைக்குத் தலைமை தாங்கி நடத்தினான். வெற்றி அவன் பக்கம் வந்து புகுந்தது. இராசாதிராசன் யானைமேல் இருந்து இறந்தமையால், அவன் “யானைமேல் துஞ்சியதேவன்” என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப்பட்டான்.

இரண்டாம் இராசேந்திரன்

கொப்பத்தில் நடந்த போர்க்களத்தின் கண்ணே முடிபுனைந்து கொண்ட இராசேந்திரன் கோலாப்பூர் நோக்கிச் சென்றான் ; அங்கே வெற்றித்தூண் நாட்டினான். அது மட்டுமல்ல; கீழைச்சாளுக்கிய மன்னனான இராசேந்திரனுக்குத் தன் மகளான மதுராந்தகியைத் திருமணம் செய்து கொடுத்தான். அதன் மூலம் சோழ சாளுக்கிய உறவை மேலும் வலுப்படுத்தினான். இராசேந்திரனுக்குப் பின்னர் அவன் மகனான இராசமகேந்திரன் சில ஆண்டுகள் நாட்டை ஆண்ட பிறகு கங்கைகொண்ட சோழனின் (முதல் இராசேந்திரன்) கடைசி மகனான வீரராசேந்திரன் சோழ நாட்டு அரசனானான்.