பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தமிழ் நாடும் மொழியும்


களுள்ளே இறுதியில் ஆண்ட சோழப்பேரரசன் இம்மூன்றாம் குலோத்துங்கனே. இவனுக்குப்பின் வந்த மூன்றாம் இராசராசன் (1216-46) சேந்தமங்கலத்தை ஆண்ட கோப்பெருஞ்சிங்கப் பல்லவனால் சிறைசெய்யப்பட்டான். ஒய்சால மன்னனான நரசிங்கனால் தான் பின் இச்சோழன் விடுதலை செய்யப்பட்டான். இது நடந்த காலம் கி. பி. 1244. இதற்குப் பின்பு சோழப்பேரரசு வீழ்ச்சியை நோக்கி விரைந்து ஓடலாயிற்று. சீரங்கத்திற்கருகிலுள்ள கண்ணனூரிலே ஒய்சாலர்கள் தனி நாடு அமைத்துக்கொண்டனர். மூன்றாம் இராசராசனுக்கும், மூன்றாம் இராசேந்திரனுக்கும் இடையே சண்டை மூண்டது. பாண்டியன் இதில் தலையிட்டான். காகத்தீயர்கள் கணபதி, உருத்திரதாமன் என்ற இருவர் தலைமையின்கீழ் தெற்கே தங்கள் பேரரசை விரிவாக்கினர். இவ்வாறு கி. பி. 1275-இல் சோழப்பேரரசு-இராசராசனும் இராசேந்திரனும் கண்ணீரையும் செந்நீரையும் கொட்டி வளர்த்த பேரரசு அடியோடு அழிந்தது. இவ்வழிவுக்கு மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பின்புவந்த சோழ அரசர்தம் வலிமைக்குறைவும், தென்னகத்தில் ஓய்சாலர்கள், காகத்தீயர்கள் ஆகியோரின் எழுச்சியும், குறுநில மன்னர்களின் தனியரசும், பாண்டிய மன்னர்களின் எழுச்சியும் மூல காரணங்களாகும். அரசுரிமை பற்றிச் சோழ மன்னர்களிடையே எழுந்த போரே சோழப்பேரரசைப் பெரிதும் அரிக்கலாயிற்று. மேலும் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சிசெய்து, 1231-இல் சோழனைத் தெள்ளாறு என்னும் இடத்தில் வைத்து வென்று அவனைச் சிறையும் செய்தான். இதே கோப்பெருஞ்சிங்கன் திருச்சிக்கு அருகிலுள்ள பெரம்பலூரில் வைத்து ஓய்சாலர்களைக்கூட முறியடித்து ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும் தன் அதிகாரத்தை ஏற்படுத்தினான். ஓய்சாலரும், காகத்தீயரும் தெற்கே சோழநாட்டை நோக்கித் தமது