பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

107


கிராம மகாசபை

ஒவ்வொரு கூற்றத்திற்கும் ஒவ்வொரு மகாசபை இருந்தது. இந்த மகாசபைக்கு ஒவ்வொரு குறும்பும் (வார்டு) ஒவ்வொரு உறுப்பினரைக் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுத்து அனுப்பியது. யார் தேர்தலில் நிற்கலாம், யார் தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்குரிய தகுதிகளும், தேர்தல் விதிகளும் அக்காலக் கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தலில் நிற்போருக்கு இருக்க வேண்டியன :-

  1. வரி செலுத்துகின்ற அல்லது வரி விதிக்கப்பட்ட கால் வேலி நிலம்.
  2. ஒரு சொந்த வீடு.
  3. வயது வரம்பு 35-75.
  4. மந்திர - பிராமண வேதத்தைக் கற்றுக் கற்பிக்கக் கூடிய ஆற்றல்.
  5. 1/8 வேலி நிலம்; ஒரு வேதமும், ஒரு பாசியமும் கற்றுக் கற்பிக்கும் ஆற்றல்.

மேற்கூறிய தகுதிகளோடு மேலும் பெறவேண்டியன :-

(1)வேதவிதிப்படி ஒழுகுதல் (2) அறமுறைப்படி ஈட்டிய செல்வம் (3) நற்சிந்தை (4) கடந்த மூன்றாண்டுகளாக யாதொரு குழுவிலும் இல்லாதிருத்தல்.

தேர்தலுக்கு நிற்க அனுமதிக்கப்படாதவர்கள்: -

இதற்கு முன்னால் ஏதாயினும் ஒரு குழுவில் இருந்து கணக்குகளை ஒழுங்கான முறையில் ஒப்பிக்காதவர்களும் அவர் தம் உறவினர்களும்.

பிறன்மனை விழைந்தோர், இழி பெண்டிரைச் சேர்ந்தோர், பஞ்சமா பாதகம் செய்தோர்.