பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தமிழ் நாடும் மொழியும்


சாதியினின்றும் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டவர்கள்.

வாழ்நாள் முழுதும் தள்ளி வைக்கப்பட்டவர்கள்.

பிற்காலச் சோழர் ஆட்சியில் நடந்த தேர்தல் முறை வரலாற்று வல்லுநர்களைப் பெரிதும் கவர்ந்ததொன்றாகும். தேர்தல் கிரேக்க நாட்டில் நடந்ததை - ஒத்திருந்தது என அவர்கள் கூறுகின்றனர். முதலில் தலைமைக் குருக்கள், கிராமப் பெரியவர்கள் அத்தனை பேரும் தவறாமல் கோவிலில் கூடுவார்கள். ஒரு குடத்தில் தேர்தலுக்கு நிற்போர் பெயர்களைத் தனித்தனியாக எழுதிய ஓலை நறுக்குகள் கிடக்கும். பின்னர் குடம் நன்கு குலுக்கப்படும். களங்கமற்ற பளிங்கு உள்ளமும், உலகமறியாத வயதும் உடைய ஒரு சிறுவனை அழைத்துக் குடத்திலுள்ள ஓலையை எடுக்கச் செய்வர். எடுத்த ஓலையைத் தலைமைக் குருக்கள் வாங்கி அதிலுள்ள பெயரை உரக்கப்படிப்பார். அதுபோல எல்லாக் குருக்களும் படிப்பார்கள். இவ்வாறு படிக்கப்பட்ட பெயருடையவரே கிராமச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார். இவ்வாறே எல்லா உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மகாசபையின் பணிகள்

ஒவ்வொரு கூற்றத்துக்கும் ஒவ்வொரு மகாசபை இருந்தது. மகாசபைகள் அடிக்கடி அரசாங்க அதிகாரிகளால் மேற்பார்வை இடப்பட்டபோதிலும், கிராமத்தைப் பொறுத்த வரையில் அல்லது அச்சபைக்குட்பட்ட ஊர்களைப் பொறுத்த வரையில் மகாசபை முழு அதிகாரம் செலுத்திவந்தது என்னலாம். கூற்றத்தின்கண் உள்ள ஊர்களும் நிலங்களும் மகாசபைக்குக் கட்டுப்பட்டனவாக விளங்கின. பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களும், கவனிப்பாரற்ற நிலங்களும் கிராமச் சபைக்கே சொந்தமாயின. அவற்றைப் பிறருக்கு