பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தமிழ் நாடும் மொழியும்


குத் துணையாகப் பணியாளர் படையும் சோழர் காலத்தில் இருந்ததாகத் தெரியவருகிறது. இக்காலத்தில், போர்க் காலத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தார் ஆற்றிவரும் பணிகளையே அப்பணியாளர் படையிலுள்ளோரும் செய்துவந்தனரெனக் கூறலாம். மேலும் போர்க்காலங்களில் படை வீரர் தவிர, பொதுமக்களும் நாட்டைக் காத்தற்பொருட்டுப் போரில் ஈடுபட்டனர்.

பொதுநலப் பணி

சோழர்கள் தங்கள் வருவாயிற் பெரும்பங்கைக் கோவிலுக்கும் வேளாண்மைக்குமே செலவிட்டனர். தஞ்சைப் பிரகதீசுவரர் கோவில் சோழர்கள் கட்டியதே. இக்காலத்தில் பொது நலத்துறை (P. W. D.) என்ன பணிகளைச் செய்கின்றதோ அதே பணிகளையே அக்காலத்திற் செய்ய ஒரு குழு இருந்தது. சிறு குளம், கோவில், அணைக்கட்டு முதலிய சிறுசிறு வேலைகளைக் கிராம மகாசபைகள் கவனித்துக் கொண்டன. பெரும்பெரும் ஏரிகளும், சாலைகளும், அணைக்கட்டுகளும் கட்டுவதே பொது நலத்துறையின் பணியாகும். கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ளது போன்ற பெரிய ஏரிகள், தஞ்சை- திருவாடி நெடுஞ்சாலை முதலியன சோழர்களால் அமைக்கப்பட்டன. தடிகைபாடி நெடுஞ்சாலை, கோட்டாற்று நெடுஞ்சாலை, வடுகவழி நெடுஞ்சாலை, கீழவழி நெடுஞ்சாலை ஆகியவை சோழர்கள் போட்ட சாலைகளாம். இதுமட்டுமல்ல; நதிகள் மூலம் சோழர் காலத்தில் வாணிகம் நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

சுருங்க உரைப்பின் சோழர்கால ஆட்சிமுறை மிகச் சிறந்த ஆட்சிமுறையாகும். இன்று நடக்கும் ஆட்சிமுறை அவர்கள் விட்டுச்சென்ற ஆட்சிமுறையின் சில கூறுகளை நீக்கியும், அவற்றோடு சில கூறுகளைச் சேர்த்தும் அமைக்கப்