பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தமிழ் நாடும் மொழியும்


முதலிய இயற்கை உருவங்களும், கற்பனை உருவங்களும் உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்டன. மேலும் இறைவனது திருவுருவை, நின்ற கோலமாகவும், இருந்த கோலமாகவும், ஆடும் (சிவன்) அல்லது கிடந்த (திருமால்) கோலமாகவும் சிற்பிகள் செய்தனர்.

சோழர் தலைநகர்

சோழப் பேரரசின் தலை நகரங்களாகத் தஞ்சையும், கங்கை கொண்ட சோழபுரமும் விளங்கின. இவற்றுள் கங்கை கொண்ட சோழபுரம் திருச்சி மாவட்டத்தின் வடகிழக்கு மூலையில் கொள்ளிடக் கரையின் வடபுறமுள்ள சாலையில், மனதைக் கவரும் மாடமாளிகைகளும், குவலயம் புகழும் கூடகோபுரங்களும், அழகுமிக்க மணிமாட வீதிகளும், இன்பந்தரும் இளமரக்காக்களும், வளமிக்க வாவிசூழ் சோலைகளும், சுற்றிலும் புறமதில்களும், அரண்களும், அகழ்களும் கொண்டு சோழர் காலத்தில் விளங்கியது. ஆனால் இன்றோ அந்நகர் சிதைந்த நிலையில் சிற்றூராய்க் காணப்படுகின்றது. சுற்றிலும் மண்மேடுகளும், இடிந்த சுவர்களும் அடர்த்தியாக வளர்ந்த செடிகொடிகளும் உள்ளன. இவற்றின் நடுவே கோபுரங்களுடன் கூடிய பாழடைந்த கோவிலொன்று காணப்படும். கோவிலின் முன்புறத்திலுள்ள கோபுரம் இடிந்துள்ளது. இக்கோவிலினுள்ளே முப்பது அடி உயரமுள்ள, நடுவில் இரண்டு பிளவுள்ள சிவலிங்கம் ஒன்று உள்ளது. இச்சிவலிங்கம் தஞ்சைக் கோவிலிலுள்ள சிவலிங்கத்தை ஒத்திருக்கின்றது.

சிதைந்துபோன இச்சீரிய ஊரைப்பற்றிப் பரோலாவின் 'கசட்டீரில்' பல செய்திகள் காணப்படுகின்றன. கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டிய பெருமை முதலாம் , இராசேந்திரனுக்கே உரியது. தென்னாடு முழுவதும் வெற்றி