பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தமிழ் நாடும் மொழியும்



ருந்ததால், கல்வி, உடை, உணவு இவை இலவசமாகவே மாணவர்க்கு அளிக்கப்பட்டன. வேதம், இலக்கணம், வேதாந்தம் முதலியவை இங்கு கற்பிக்கப்பட்டன. தஞ்சைக் கல்லூரியில் தமிழ், இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளை மக்கள் பயின்றனர். இக்கல்லூரியை நிறுவியவன் இராசராச சோழன் ஆவான். இக்கல்லூரி தஞ்சைப் பெரிய கோவிலில் சீரும் சிறப்புமாய் நடந்தது. வெளியிடங்களிலிருந்து பல கலைஞர்கள் இக்கல்லூரிக்கு வந்து பணிசெய்தனர். கி. பி. 1062-ல் வீரராசேந்திரதேவன் திருமுக்கூடல் வேங்கடேசப் பெருமாள் கோவிலில் கல்லூரி ஒன்றை நிறுவினான். வேதம், வியாகரணம், சிவாகமம் முதலியன இங்கு சொல்லித்தரப்பட்டன. துறவிகளும் இங்கு மாணவராக இருந்தனர். மாணவர்களுக்கு விடுதி வசதியும், மருத்துவ வசதியும் செய்துதரப்பட்டன. திருவொற்றியூர், புன்னைவாயில் இவ்விடங்களிலிருந்த கல்லூரிகளில் இலக்கணம் படிக்க வாய்ப்பிருந்தது. குடந்தைக் கோவில்களில் விளங்கிய கல்லூரிகள் வடமொழி தென்மொழிக் கல்லூரிகளாக விளங்கின. இவ்வாறு சோழப் பேரரசில் கல்லூரிகள் பல இருந்தமையால் மக்கள் நன்கு கற்று, கல்வியிற் சிறந்தோராய் விளங்கினர்.