பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தமிழ் நாடும் மொழியும்


என்ற பாண்டியனையே சாரும். மாறவர்மனுக்குப் பின்வந்தவன் சேந்தன் நெடுஞ்செழியன் என்பவனாவான். இவன் கி. பி. 645 முதல் 670 வரை நாடுகாவல் புரிந்தான். இவன் நீதி மீது பற்றும், பெருவீரமும் உடையவன். இவனுக்கு வானவன் என்றதோர் பட்டப்பெயரும் உண்டு. அதிலிருந்து இப்பாண்டியன் சேரரையும் வென்று விளங்கியவன் என அறியலாம்.

சேந்தன் செழியற்குப்பின் அவன் மகனான அரிகேசரி பராங்குச மாறவர்மன் கி. பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இப்பாண்டியன் பரவர்களை அழித்ததாகவும், நெல்லையில் வைத்துப் பல்லவனை வென்றதாகவும் கூறப்படுகிறது. இவனே கூன்பாண்டியனாவான் என்பது சில வரலாற்றாசிரியர்கள் கருத்து. தொடக்கத்தில் இவன் சமணனாக இருந்து பின் சம்பந்தரால் சைவனாக்கப்பட்டான். இவன் மனைவி சோழகுலத்தைச் சேர்ந்த மங்கையர்க்கரசியாவார். இவன் அமைச்சர் குலச்சிறையார். சைவர்க்கும் சமணர்க்கும் அனல்-புனல் வாதங்கள் நடைபெற்றதும், சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு எரியூட்டியதும், சமணர் 8000 பேர் கழுவேற்றப்பட்டதும் இவன் காலத்தில் நிகழ்ந்தனவாகக் கூறப்படுகின்றன.

இவனுக்குப் பிறகு இவன் மகனான கோச்சடையன் ரணதீரன் பட்டம் பெற்றான். இவன் பெயரால் கோச்சடை என்ற ஊர் மதுரை நகரப் பகுதிகளுள் ஒன்றாக இன்றும் திகழுகிறது. இவன் ஆட்சி நடைபெற்ற காலம் கி. பி. 700 முதல் 740 வரை ஆகும். இவன் செய்த போர்களும், பெற்ற வெற்றிகளும் பலப்பல. மேற்கே இவன் மங்களூர் வரை படையெடுத்துச் சென்றான்; வாதாபியை ஆண்ட சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தனை வென்றான்.