பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தமிழ் நாடும் மொழியும்


என்றும், அவனுக்கு ஈழ நாட்டுக் குறுநில மன்னர்கள் உதவி செய்தனர் என்றும், இதனை அறிந்த சீமாறன் படையுடன் சென்று அவனை முறியடித்தான் என்றும் சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. இச்செப்பேட்டுச் செய்திகளை இலங்கை வரலாறாகிய மகாவம்சமும் வலியுறுத்துகிறது. சேரர்கள் சீமாறனால் தோற்கடிக்கப்பட்டனர். கும்பகோணத்தில் கங்கரும் பல்லவரும் பிற மன்னரும் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். ஆனால் இறுதியில் வெற்றி பெற்றது பாண்டியனே. எனினும் சீமாறன் சில இடங்களில் தோல்வியும் அடைந்துள்ளான். சீமாறனை மூன்றாம் நந்திவர்மப் பல்லவன் தெள்ளாற்றில் வைத்து வென்றான். மேலும் நந்திவர்மனுக்குப் பின் பட்டமேறிய நிருபதுங்கவர்மனும் அரிசிலாற்றங்கரையில் வைத்துப் பாண்டியனை வென்றான். இத்தனை தோல்விகள் அடைந்த போதிலும் சீமாறன் தளரவில்லை. தனது மகனான இரண்டாம் வரகுண பாண்டியனிடம் முன்னிருந்தபடியே பாண்டியப் பெருநாட்டை ஒப்படைத்தான்.

இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்திலும் பல்லவ-பாண்டியப் போர் தொடர்ந்து நடைபெற்றது. இப் போரினால் வரகுணன் மிகுந்த துன்பம் அடைந்தான். இவனுடைய ஆட்சி சிறுபுறம்பியப் போரோடு முடிவுற்றது. இப்போர் நடைபெற்ற ஆண்டு கி. பி. 880 என்பதாம். சிறுபுறம்பியம் என்பது குடந்தைக்கருகில் உள்ள ஒரு சிற்றூராகும். இப்போரே பிற்காலச் சோழர் எழுச்சிக்கு விதை ஊன்றிய போராகும். இப்போர் பல்லவ மன்னனான அபராசிதவர்மனுக்கும் வரகுண பாண்டியனுக்கும் நடைபெற்றது. இப்போரில் விசயாலயன் பல்லவன் பக்கம் போரிட்டான். இப்போரில் கடுமையான தோல்வி அடைந்தவன் பாண்டியனே. இதுமட்டுமல்ல; ஈழ நாட்டு அரசனும்