பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலப் பாண்டியர் வரலாறு

129


பாண்டிய நாட்டு மீது படையெடுத்தான். எனவே பாண்டியப் பேரரசு தன் நிலை குன்றியது.

வரகுணனுக்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆண்டவன் வீர நாராயணன் ஆவான். இவன் சேரர் உதவியோடு ஓரளவு தன் நாட்டைக் காக்க முற்பட்டான். ஆனால் இறுதியில் தன் தாய் பிறந்த நாடான சேர நாட்டுக்கே இவன் ஓடும்படி நேரிட்டது. இவனுக்கு அடுத்து அரசனான இவன் மகன் இரண்டாம் இராசசிம்மன் பாண்டியப் பேரரசை மீண்டும் வலிமையுடையதாக்கத் தன்னால் இயன்றவரை முயன்றான். எனினும் முடியவில்லை . கி. பி. 916-இல் வெள்ளூரின்கண் நடந்த போரில், பாண்டியனும் அவனுக்கு உதவி செய்த ஈழத்தரசனும், சோழ மன்னன் பராந்தகனால் முறியடிக்கப்பட்டனர். இராசசிம்மன் ஈழ நாட்டுக்கு ஓடி ஒளிந்துகொண்டான். அதன் பின்பு இழந்த பாண்டிய நாட்டைப் பாண்டியனால் மறுபடியும் பெறமுடியவே இல்லை. அவனோடு முதற்பேரரசு ஒழிந்தது. ஆனால் பாண்டிய நாட்டில் சோழராட்சி அமைதியாக நடைபெறமுடியவில்லை. சோழராட்சிக்கு அடிக்கடி பாண்டியர்கள் தொல்லை பல தந்தனர். ஆனால் சோழப்பெருவேந்தன் இராசராசன் பாண்டிய நாடு முழுவதையும் வென்று தன்னாட்டோடு சேர்த்துக்கொண்டான்; தன் மக்களுள் ஒருவனுக்குச் சோழ பாண்டியன் என்ற பட்டத்தைச் சூட்டிப் பாண்டிய நாட்டை ஆளுமாறு அனுப்பியும், வைத்தான். சிங்கள மன்னர்கள் சோழரை எதிர்க்குமாறு பாண்டிய நாட்டு இளவரசர்களை அடிக்கடி தூண்டியும், உதவியளித்தும் வந்தனர். கி. பி. 949-ல் நடந்த தக்கோலப் போரில் சோழர் படை சற்றுப் பின்வாங்கவே, வீரபாண்டியன் சற்று ஊக்கத்தோடு நாட்டுரிமைக்காகப் போரிட்டான். ஆனால் போரின் முடிவில் அவன் முறியடிக்கப்பட்டு ஓடி ஒளிந்தான். இதன் பின்னர்