பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலப் பாண்டியர் வரலாறு

131


காலத்தில் சோழ நாட்டை மூன்றாம் இராசராசன் ஆண்டு வந்தான். பாண்டியன் திடீரெனச் சோழ நாட்டைத் தாக்கினான்; இராசராசனை வென்றான்; தஞ்சையை அழித்தான். எனினும் ஓய்சால மன்னனின் தலையீட்டால் சோழ நாட்டை திருப்பிச் சோழனுக்குத் தந்தான். இவனுக்கடுத்தாற்போல இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பட்டம்பெற்றான். இவன் கி. பி. 1238 முதல் 1251 வரை நாட்டை நல்ல முறையில் ஆண்டான். இவன் காலமான பிறகு சடாவர்மன் சுந்தரபாண்டியன் மன்னனானான். பிற்காலப் பாண்டியர்களுள் பெருவீரனாகவும், பேரரசனாகவும் விளங்கியவன் இவனாகும். சடாவர்மன் பெரம்பலூரில் நடந்த போரில் ஓய்சாலரை முறியடித்து, கொப்பத்தின் கண்ணே விளங்கிய அவர்தம் கோட்டையையும் முற்றுகையிட்டுக் கவர்ந்தான். ஈழமும், சேர நாடும் பாண்டியனின் சுட்டு விரல் கண்டு நடுநடுங்கின. அவன் அடிபணிந்தன. சோழ நாடு பாண்டிய நாடாயிற்று. சுந்தரபாண்டியனின் நண்பனும், தளபதியுமாகிய சடாவர்மன் வீரபாண்டியன் இவனுக்காகக் கொங்குநாட்டினை வென்றான். பின்னர் பாண்டியன் ஈழத்தோடு போரிட்ட போது இவன் பேருதவி புரிந்தான். இந்தப் பேரரசன் காலத்தில்தான் இரண்டாவது பாண்டியப் பேரரசு புகழேணியின் உச்சியில் நின்று நடம் புரிந்தது. காகத்தீய மன்னனான கணபதியும், பல்லவ மன்னனான சேந்தமங்கலம் கோப்பெருஞ்சிங்கனும் இப்பாண்டிய மன்னனால் அடைந்த தொல்லையும் துயரமும் அளவிடற்கரியன. நெல்லூரை ஆண்ட கந்தகோபன் பாண்டியனால் முறியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். பாண்டியன் நெல்லூரில் வைத்து வீரமுழுக்காடினான். சிதம்பரம், சீரங்கம் ஆகிய இரு ஊரின் கண்ணும் உள்ள கோவில்களை இப்பாண்டியன் புதுக்கி அழகுசெய்தான். அது மட்டுமல்ல; சிதம்பரத்தில் பொன்னம்பலமும் அமைத்தான். இவன்றன் அறச் செயல்கள்