பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. பிறநாட்டார் ஆட்சிக் காலம்


முன்னர்க் கூறியபடி பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர் வடக்கிருந்து முகமதியரும், அவரை எதிர்த்த விசய நகர மன்னரும், மராட்டியரும் தமிழ் நாட்டில் நுழைந்து அதனைப் போர்க்களமாக்கி, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்து சென்றனர். நம் நாட்டில் நுழைந்த முகமதியர் கோவிலையும், குளத்தையும் கெடுத்து, நாட்டையும், நகரையும் பாழாக்கி, கிடைத்தவற்றை வாரிக்கொண்டு சென்றனர். அக்காலத்திலே விசய நகர வேந்தர் முகமதியர்களை முறியடிப்பதற்கு வீறுகொண்டு எழுந்தனர். மராட்டியரும் மார்தட்டி எழுந்தனர். அவர்கள் வீரமுடன் போரிட்டு ஓரளவு வெற்றியும் பெற்றனர். இதன்காரணமாய் விசயநகரத்தாரும், மராட்டியரும் தமிழ்நாட்டை ஆளுதற்குரிய வாய்ப்பைப்பெற்றனர். வடக்கே முகமதியருடைய வலிமை நாளுக்கு - நாள் வளர்ந்த காரணத்தால் தெற்கு நோக்கி வந்த மராட்டியர் செஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் முதலிய இடங்களைக் கைப்பற்றி ஆட்சிபுரியலாயினர். இதே நேரத்தில் விசயநகர மன்னரும் கன்னியாகுமரி வரையில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். இதன் காரணமாய் மகமதியருடைய படையெடுப்புக்கள் குறையலாயின.

விசயநகர மன்னர்

முகமதிய மன்னன் முகமதுபீன் துக்ளக் தமிழ் நாட்டின் தென்பகுதியை வென்று, அதனை ஆள சலாலுதீன் அசன் என்பவனை நியமித்தான். இவன் கி. பி. 1335-இல் மதுரையில் தன் தனியரசையே நிறுவினான். இவனுக்குப் பின்னர் ஆண்ட கியாசுதீன் என்பவன் கொடுஞ் செயல்கள் பல புரிந்