பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தமிழ் நாடும் மொழியும்


ஆனால் பிற்காலை, முறியடிக்கப்பட்ட அதே முகமதியராலேயே மீனாட்சி வஞ்சிக்கப்பட்டாள். நாயக்க வமிசம் நசிந்தது.

சங்க காலத்திலே தமிழகத்தை மூவர் ஆண்டனர். ஆனால் நாயக்கரோ பிற்காலத்தில் தமிழ் நாட்டை ஒருசேர ஆண்டனர். அவர்தம் ஆட்சியின் கீழ் நெல்லை, இராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சை, தென்னார்க்காடு, செங்கல்பட்டு ஆகிய அத்தனை மாவட்டங்களும் இருந்தன. இது மட்டுமா? மைசூரும், கொங்கு நாடும் கூட அவரிடம் இருந்தன. சத்தியமங்கலம், தாராபுரம், ஈரோடு முதலிய இடங்களிலும் கூட நாயக்கரின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

நாயக்கர் ஆட்சியில் ஆட்சி முறைகள் நன்கு வகுக்கப்பட்டிருந்தன. எனவே ஆட்சியும் நன்கு நடைபெற்றது. தளவாய், ராயசம், பிரதானி என்போர் இக்கால அமைச்சர் போல் அக்காலத்தில் ஆட்சி புரிந்தனர். தளவாய் அரிய நாதர், நரசப்பர் போன்றோர் இத்தகைய அமைச்சராவர். பதினேழாம் நூற்றாண்டின் இடையில் நாயக்க அரசின் ஆண்டு வருமானம் 1¼ கோடி ரூபாயாகும். நாயக்கர்கள் அரசுக்கட்டிலில் ஏறிய காலத்தில் தமிழகம் குழப்பத்திலும், கொள்ளையிலும், கொலையிலும் மிதந்துகொண்டு இருந்தது. அக்காலத்தில் தம் ஆட்சித் திறத்தாலும், அறிவின் உரத்தாலும் தமிழகத்தை அக்கொள்ளை முதலியவற்றினின்றும் காத்து நல்லாட்சியை ஏற்படுத்தினர்.

நாயக்கரினால் தமிழகம் அடைந்த பயன்களுள் தலையானது கோவிலே. அவர்கள் காலத்திலேதான் அழகொழுகும் சிற்பங்கள், ஓவியங்கள் பொதிந்த பற்பல கோவில்கள் தமிழகத்தில் எழுந்தன. இன்றுள்ள மதுரை மீனாட்சி கோவிலும், ஆயிரக்கால் மண்டபமும், மாலும், ராய கோபுர