பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறநாட்டார் ஆட்சிக் காலம்

145


தமிழரும் தெலுங்கரும்

தமிழ்நாட்டிலே தெலுங்கரும், அவர்தம் பழக்க வழக்கங்களும் வெகுவாகப் பரவிய காலம் விசய நகரப் பேரரசின் காலமேயாகும். விசய நகரப் பேரரசின் ஆட்சிக்குத் தமிழகம் அடங்கிய காரணத்தால், விசயநகரப் பேரரசின் சார்பாளர் களாகவும், ஆளுநர்களாகவும் பல தெலுங்கர்கள் (ஆந்திரர்) தமிழகத்திற்கு வந்து குடியேறினர். நாளடைவில் அவர்கள் பரம்பரை பெருகிற்று. அதோடு தெலுங்கர்கள் பலர் போர் வீரராகவும், வணிகராகவும், தொழிலாளராகவும் வந்து குடியேறினர். தமிழகத்திற் புகுந்த இவர்கள் தெலுங்கு நாட்டுப் பழக்க வழக்கங்கள் பலவற்றைத் தமிழ் மக்களிடையே பரப்பிவிட்டனர்.

தமிழகத்திற் புகுந்த தெலுங்கர்கள் பல கோவில்களையும், கல்விக் கழகங்களையும் கட்டினதாகத் தெரிகிறது. மதுரைக்கே பெருமை தந்துகொண்டிருக்கின்ற மீனாட்சியம்மன் கோவிலும், மகாலும் நாயக்கர் கட்டியவையே. தாடிக்கொம்பு, தாரமங்கலம், திருவரங்கம், பேரூர் முதலிய பலவிடங்களிலே தெலுங்கரால் கட்டப்பட்ட கோவில்கள் இன்றும் கவினுடன் காட்சியளிக்கின்றன.

விசய நகரப் பேரரசின் காலத்தில் நிலவிய கல்லூரிகளைப் பற்றிய குறிப்புகள் அக்காலத்திய பாதிரிகளின் குறிப்புகளில் காணப்படுகின்றன. அருணகிரி, தாயுமானார், அதிவீரராமபாண்டியன் ஆகியோர் விசய நகரப் பேரரசின் காலத்திலே வாழ்ந்த தமிழ்ப் புலவர்களாவர். மேலும் தெலுங்கர்கள் மிகுதியாகக் குடியேறிய சிற்றூர்கள் இன்று தென்பாண்டி நாட்டில் ஏராளமாக உள. நாயக்க மன்னரால் வெட்டப்பட்ட குளங்களும் தமிழகத்தில் உள.

தமிழ் நாட்டில் கிறித்தவமும், இசுலாம் மதமும் நன்கு பரவியது விசய நகரப் பேரரசின் காலத்தேதான்.