பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தமிழ்நாடும் மொழியும்


பட்டனர். தமிழ்ச் சமுதாயம் உள் வலிவு இன்றிக் கிடந்தது. அத்தகைய சமுதாயத்துக்கு மேலை நாட்டு அறிவியற் கல்வியை அளித்து அறியாமை இருளை அகற்றி அறிவொளி பெறச்செய்து, சாதிப் பிரிவினை களைந்து, தலை நிமிரச்செய்தது ஆங்கிலேய ஆட்சியே. சமுதாயத்திலே எல்லோரும் சமம்; எல்லோருக்கும் கல்வி என்ற எண்ணம் அரும்பியதற்குக் காரணம் ஆங்கிலேய ஆட்சியே.

அரசியல் சீர்திருத்தம்

ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளாக, துருக்கர்கள், ஓய்சாலர்கள் முதலிய அயலவர் படையெடுப்பாலும், அவர்கள் செய்த போர்களாலும் அலைத்துக் குலைத்துக் குழப்பத்திலே மிதந்து வந்த தமிழகத்திலே ஓர் ஒழுங்கான ஆட்சியை நிறுவி அமைதியை ஏற்படுத்தியது ஆங்கிலேய ஆட்சிதான். மேலை நாட்டு முறைப்படி, அழகும் ஒழுங்குமிக்க நல்ல காவற்படையினை நிறுவியும், அதிலே தமிழரைப் பயிற்சி பெறுவித்தும், அப் பயிற்சிக்கான கல்லூரிகளை நிறுவியும், தமிழனைப் படைத்துறையில் சிறந்தோங்கச் செய்த பெருமை ஆங்கிலேய ஆட்சிக்குரியதாகும். நாட்டை மாநிலமாகவும், மண்டலமாகவும், மாவட்டமாகவும், வட்டமாகவும், வட்டாரமாகவும் பிரித்து, நல்லதோர் ஒழுங்கான ஆட்சியை நடத்தியது ஆங்கிலேய அரசே. ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகம், மாவட்டக் கழகம் முதலிய ஆட்சி மன்றங்களை ஏற்படுத்திப் பெருஞ்சாலைகளும், சிறு சாலைகளும், இருப்புப் பாதைகளும் அமைத்து, ஊர்களை இணைத்து, கார், புகைவண்டி முதலிய ஊர்திகளையும், வான ஊர்தியையும் ஓடவிட்டது ஆங்கிலேய அரசே. அறியாமை இருளில் கிடந்த தமிழனுக்கு ஆங்கிலக் கல்வி அளித்து, ஆளும் திறனையும் பயிற்சியையும் அளித்தவர் ஆங்கிலேயரே.