பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறநாட்டார் ஆட்சிக் காலம்

153


கல்வியும் மொழி வளர்ச்சியும்

கல்வி வாடையே அடிக்கப் பெறாத தமிழ் மக்களும் தமிழ்ப் பெண்டிரும் கல்வியளிக்கப் பெற்றனர். இன்று மாநிலத் தலைவர்களாகின்ற அளவுக்குப் பெண்டிர் உயர்ந்தமைக்குக் காரணம் ஆங்கிலேயர் அளித்த கல்வியே. ஆங்கிலேயர் ஆட்சியிலே தமிழ்மொழி பெற்ற ஆக்கம் ஒன்றல்ல; பல; பலப்பல. அச்சுப்பொறி மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களை அச்சிட்டு எல்லோரும் படிக்க வாய்ப்பளித்தவர் ஆங்கிலேயரே. மேலும் தமிழிலே சிறு கதை, நெடுங்கதை, கட்டுரைகள் முதலிய பல புதிய துறை நூல்களும், செய்தித்தாள்களும், வார, மாத வெளியீடுகளும் தோன்றின. தமிழ் நூல்களை ஆங்கில மொழியிலே பெயர்த்தெழுதி உலகமெலாம் அறியச்செய்தது ஆங்கிலேய ஆட்சியே. கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ஆங்கிலத்தோடு தமிழும் கற்பிக்க வழிவகை செய்தவர் ஆங்கிலேயரே. தமிழ் தனித்தியங்கும் ஆற்றலுடையது என்று நிறுவியவர் ஆங்கிலேயரே.

பிற நலன்கள்

தமிழ் நாட்டிலே, நூல் நூற்றல், நெய்தல் போன்ற தொழில்களுக்குரிய இயந்திரங்களைக் கொண்டு வந்து நாட்டின் பல்வேறு இடங்களிலே பெரும் பெரும் தொழிற் சாலைகளை ஏற்படுத்தியமைக்குக் காரணமாக இருந்தவர்கள் ஆங்கிலேயரே. பெரும் அணைக்கட்டுகளைக் கட்டி, நாட்டிலே நீர்ப்பாசனம் நன்கு நடைபெறுமாறும், மின்சாரம் கிடைக்கு மாறும் செய்து நாடு நலமுறச் செய்தவர்கள் ஆங்கிலேயர்களே.