பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழின் தொன்மையும் சிறப்பும்

161


என்று கொள்ளவேண்டும். இதனையே சி. வை. தாமோதரன் பிள்ளையும் வலியுறுத்துகின்றார். இத்தகு சிறப்பு மிக்க தமிழ் குடமுனியால் உண்டாக்கப்பட்டது என்று ஒருசிலர் கூறிவந்தனர். இது ஆதாரமற்றதும் பொருத்தமற்றதும் ஆகும்.

வடமொழியும் தமிழ் மொழியும்

பல வட சொற்கள் தமிழில் வழங்கிவரும் காரணத்தால் வடமொழியினின்றும் தமிழ் வந்ததாக ஒருசிலர் தவறாக நினைத்துக் கூறத் தொடங்கினர். தமிழ் வடமொழியினின்றும் வந்ததன்று. தமிழ்மொழி வடமொழியினும் தொன்மை வாய்ந்ததென அறிஞர் பலர் கூறுகின்றனர். எனவே தமிழ் வடமொழியிலிருந்து வந்தது என்பது 'தந்தைக்கு முன் மகன் பிறந்தானென்று' சொல்வது போன்றதாகும்.

தமிழின் தொன்மை

உலகிலே தோன்றிய மொழிகள் ஒன்றல்ல; இரண்டல்ல; பலப்பல. அவற்றுள்ளே செம்மொழிகள் எனக் கூறப்படுபவை ஐந்து. இந்த ஐந்திலே இன்றுவரையும் பொன்றாப் புகழுடன் நாட்டு வழக்கிலும் ஏட்டு வழக்கிலும் களிநடம் புரிந்துகொண்டும், கணக்கற்ற இலக்கிய இலக்கணங்களிலே புரண்டுகொண்டும் இருப்பது சாவா மூவாத் தமிழ்மொழியே ஆகும். ஏனைய மொழிகள் எல்லாம் ஏட்டு வழக்கில் மட்டும் நிலவுகின்றனவே தவிர நாட்டிலே தவழவில்லை. இனித் தமிழின் தொன்மையினை ஆராய்வோம்.

தென்னிந்தியாவில் வழங்கப்படும் மொழிகளைத் திராவிட மொழிகள் என்று வழங்குகிறோம். திராவிடமொழிகளில் தமிழே தொன்மையானது ஆகும். அறிஞர் கால்டுவெல் திராவிடமொழிகளைத் திருந்தியவை, திருந்தாதவை என்று