பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழின் தொன்மையும் சிறப்பும்

165


மக்கள் எல்லோரும் நன்கு அறிவர். அஃது இற்றைக்குச் சற்றேறக் குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. தொல்காப்பியம் ஒர் இலக்கண நூல். ஒரு மொழியில் இலக்கண நூல் எப்பொழுது தோன்றும்? அம் மொழியில் இலக்கியங்கள் பல நூருயிரமாகப் பெருகிப்பெருகி வளர்ந்த பின்பே இலக்கண நூல் தோன்றுதல் இயல்பு. எனவே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தோன்ற வேண்டுமானுல் அதற்கு எத்தனை ஆண்டுகட்கு முன்னுல் இலக்கிய நூற்கள் பல தமிழில் தோன்றியிருத்தல் வேண்டும்?

ஒரு மொழியில் இலக்கியங்கள் திடீரெனப் புற்றிசல்கள் போலத் தோன்றுதல் என்பது நடவாத காரியம். அந்த மொழியில் சுவைமிக்க இலக்கியங்கள் தோன்ற வேண்டும் என்றால் அந்த மொழி பலநூறு ஆண்டுகட்கு முன்பே தோன்றி மக்களிடையே வழங்கி, பின் புலவரிடையே தவழ்ந்து சொல்வளம் பல்கியிருத்தல் வேண்டும். இதிலிருந்து தமிழ் பல்லாயிரம் ஆண்டுகட்கும் முந்திய ஒரு தொன்மை மொழி என்பது விளங்கும்.

கி. மு. வில் செய்யப்பட்ட ரோம நாடகம் ஒ ன் றி ல் கன்னட மொழிக் காட்சி ஒன்று வருகிறது. கன்னட மொழி என்பது தமிழ் மொழியின் சேய் மொழிகளுள் ஒன்று என்பதை அறிஞர் எல்லோரும் கூறுவர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும். மோகஞ்சோதாரா, ஆரப்பா என்னும் சிந்துவெளிப் புதையற் பொருட்களிலே காணப்பட்ட எழுத்துக்கள் எல்லாம் தமிழ் எழுத்துக்களை ஒத்திருக்கின்றன எனப் பேரறிஞர் ஈராசடிகள், மார்சல் என்பவர்கள் கூறியிருக்கின்றனர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும்.