பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்தமிழ்

177


இன்பந் தருவனவாகும். நாடகமோ கண்ணுக்கும் இன்பத் தரும் வன்மை படைத்ததாகும். தமிழ் மொழியிலே நாடக நூற்கள் முதலில் மதவிடயமாகத் தோன்றியிருக்கவேண்டும் என்று கருதுவது அவ்வளவு சரியன்று. இக்கருத்து இடைக் கால நாடகவளர்ச்சிக்குப் பொருத்தமாகும். இடைக் காலத்திலே நாடகத் தமிழைச் சமயமே வளர்த்தது என்னலாம். அதிலும் சைவமும் வைணவமுமே ஆடல் பாடல்களையும் கூத்தையும் நன்கு வளர்த்தன என்னலாம். முதன்முதலில் ஆடல் பாடல்களே நாடகத் தமிழின்கண் விளங்கின. பின்னர் கதைகள் பல நுழைந்தன. கதை கூறும் உரையாடல்களும் காலப்போக்கில் நுழைந்தன. அதன் பிறகு நாடகம் வேத்தியல் பொதுவியல் என இரண்டாகப் பிரிந்தது. தொடக்க காலத்திலே சீரும் செழிப்புமாக விளங்கிய நாடகத் தமிழ் பிற்காலத்தில் ஆரியராலும் சமணராலும் வீழ்ச்சி அடைந்தது. நாடகம் பாமரர் கையகப்பட்டுச் சீரழிந்தது. பரத நாட்டியம் காமக் கணிகையர் வயப்பட்டுச் சீர்குலைந்தது. சுருங்க உரைப்பின் இவர்கள் தங்கள் வயிற்றை வளர்க்கக் கலையைப் பயன்படுத்தினர். கலை கொலையுண்டது.

வடமொழித் தொடர்பாலேயே தமிழில் நாடக நூல்கள் தோன்றின என்பர் ஒருசிலர். இக்கூற்றுக்கு இக்காலத்தில் யாரும் செவி கொடுப்பதில்லை. ஏன்? இக்கூற்றிலே உண்மை வரட்சி மிக்கு இருத்தலால் என்க. வட மொழித் தொடர்பின்றியே தமிழிலே நாடகம் தோன்றி வளர்ந்தது என்பதைத் தொல்காப்பியரும் சிலம்பிற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் விளக்கி நிற்கின்றனர். 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்' என்பது தொல்காப்பியச் சொற்றொடர். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை உரையிலே அடியார்க்கு நல்லார், நாடகத் தமிழின் இலக்கணம், நாடகத்