பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்தமிழ்

179


இயற்றப்பட்டது என்பர். பரதமும் முறுவலும் அடியார்க்கு நல்லார் காலத்லே கேள்வி அளவாய் நின்ற பழைய நூல்களாகும். சயந்தமும் குணநூலும் இவரால் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. குண நூல் நாடக உறுப்பாகிய அகச்சுவையைப் பற்றி விரிவாகக் கூறிய நூலென்று கருதப்படுகின்றது. செயிற்றியம் என்னும் நூல் சூத்திர யாப்பில் செயிற்றியனாரால் செய்யப்பட்டது. இந்த நூலிலிருந்து அடியார்க்கு நல்லாரும் இளம்பூரணரும் சில சூத்திரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். பரத சேனாபதீயம் என்னும் நூலைச் செய்தவர் ஆதிவாயிலார் என்னும் ஆசிரியர் ஆவார். இது வெண்பாவாற் செய்யப்பட்டது; அடியார்க்கு நல்லாரால் மேற்கோள் நூலாகக் கொள்ளப்பட்டது. மதிவாணர் நாடகத்தமிழ் நூல் செந்தமிழ்ப் புலவரும் நாடகாசிரியரும் கடைச்சங்கத்துப் பாண்டிய மன்னருமாகிய மதிவாணரால் செய்யப்பட்டது என்பர். இந்நூல் சூத்திரப் பாவாலும் வெண்பாவாலும் செய்யப்பட்டது. இந்நாடக நூலின் சில சூத்திரங்களை சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கையாண்டிராவிட்டால் இன்று தமிழர் நாடகக் கலையற்றவர் என்று கூற இடம் ஏற்பட்டிருக்கும். கருவூலங்கள் போன்ற இத்தகைய நூல்கள் காலவெள்ளத்தால் அழிந்துபோயின. எனினும் நாடகம் தமிழ் மொழியின் வீடகத்திற்குப் பழமையான ஏடகமாய் இலங்கியது என்பது தெற்றென விளங்கும்.

சங்க காலத்திலும் பிற்காலச் சோழர் காலத்திலும் செழிப்போடு வளர்ந்துவந்த நாடகத் தமிழ் இடைக்காலத்திலே நலிந்து ஒழிந்தது. இதற்குக் காரணம் சமணம் போன்ற பிற சமயங்களே. சமணர்கள் நாடகத்தையும் இசையையும் வெறுத்தனர். நச்சினார்க்கினியர்கூட இசை, நாடகம் காமத்தை விளைவிக்கும் என்றார். இக் கருத்துக்கள் மக்க