பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்தமிழ்

183


குறிப்பிட்ட தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்களேதான். அவர்கள் தான் நல்ல தமிழிலே துடிதுடிப்பும் கருத்துச் செறிவும் கற்பனை வளமும் பொருந்திய பல நாடகங்களை எழுதி நடித்து வருகின்றனர். இன்று நாடகத் தமிழின் உயிராக விளங்கும் ஒரு நூல் உளது எனில் அது பேராசிரி யர் சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயமே என்க. பரிதிமாற் கலைஞர் நாடகம் பல எழுதியுள்ளார் எனினும், அவை படிக்கப் பயன்படுவனவே தவிர நடிக்கப் பயன்படுவன அல்ல. ஆனால் இவர் கி. பி. 1891-ல் எழுதிய நாடகவியல் என்னும் நூல் நாடக இலக்கணத்தை நன்கு எடுத்தியம்புகிறது. இவ்வாண்டில் தான் மனோன்மணீயம் எழுதப்பட்டது.

இன்று நாடக உலகின் முடிசூடா மன்னர்களாய் விளங்குபவர்கள் நவாப் இராசமாணிக்கமும், அவ்வை டி. கே. சண்முகமும் ஆவர். நவாப் இராசமாணிக்கம் நடத்தும் இராமாயணம், ஏசு நாதர், சபரிமலை ஐயப்பன், தசாவதாரம் முதலிய நாடகங்களும், டி. கே. சண்முகம் நடத்தும் இராசராச சோழன், தமிழ்ச் செல்வம், மனிதன், இமயத்தில் நாம், ஒளவையார் முதலிய நாடகங்களும் இன்று மக்கள் உள்ளங்களை எல்லாம். கொள்ளை கொண்டனவாகும். மேலும் புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன், சகஸ்ரநாமம், எம். ஆர். இராதா, மனோகர், சிவாஜி கணேசன் போன்றவர்களும் திரைப்படங்களில் நடிப்பதோடமையாது அவ்வப்பொழுது சிறந்த நாடகங்களையும் நடத்திவருகின்றனர்.

சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற நாடகங்களுக்கும் இந்த நூற்றாண்டில் நடைபெறுகின்ற நாடகங்களுக்கும் வேறுபாடு மிகவுள. முற்காலத்து நாடகங்களிலே பாட்டுக்களே விஞ்சியிருந்தன. அக்கால நாடகங்களின் வெற்றி