பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தமிழ்நாடும் மொழியும்


அவற்றிலுள்ள பாடல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே இருந்தது. ஆனால் நாளாக ஆக மக்கள் நெஞ்சம் பாட்டை விட்டு வசனத்திலும் நடிப்பிலும் சென்றது. இதனால் வர வர நாடகங்களில் பாடல்கள் குறைந்தன. வசனமும் நடிப்பும் மிகுந்தன. ஆனால் சென்ற நான்கு ஆண்டுகளாக மக்களின் நெஞ்சம் வசனத்திலும் நடிப்பிலும் மட்டுமல்ல, கதையமைப்பிலும் செல்லத் தலைப்படலாயிற்று. வசனமும் நடிப்பும் நடிப்புக்கேற்ற கதையமைப்பும் இருந்தால் தான் இன்று நாடகங்கள் முழு வெற்றியைப் பெற முடியும்.

பாடல்கள் மிகுதியாகப் பெற்ற நாடகம் இடைக்காலத்திலே அயலவர் கூட்டுறவால் நலிந்து, பிற்காலத்திலே பல பெருமக்களால் உயிர்பெற்று, உரை நடையைப் பெற்று இக்காலத்தில் வசனமும் நடிப்பும் பெற்று கதையமைப்பை உயிராகக் கொண்டு நிலவுகிறது. சிற்பி கையிற் கிடைத்த கல் சிற்பமாகும்; சிறுவன் கையிற் கிடைத்த கல் பிறர் மீது வீச உதவும். அது கல்லின் குற்றமன்று; மனிதனின் குற்றமே. அது போல நாடகத்தால் தீமை விளையின் அது நாடகத்தின் குற்றமன்று; அதனைப் பயன்படுத்துவோரே குற்றவாளிகள். எனவே நாடகத்தை நாம் தான் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். நாடகத்தால் நாட்டு மக்கள் பெற்ற, பெறுகின்ற பயன்கள் எண்ணத் தொலையாதனவாகும்.