பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தமிழ்நாடும் மொழியும்


வடக்கே வழங்கிய தமிழிலே, வடமொழிக் கூறுகளைக் கலந்தார். அங்கு வழங்கிய தமிழ் தெலுங்காயிற்று. இன்று வடமொழியின் துணையின்றித் தெலுங்கு, மலையாளம் என்பன இயங்குதல் பெரிதும் அருமையாகிவிட்டன. அந்த அளவுக்கு அவற்றிலே வடமொழிக் கூறுகள் கலந்துவிட்டன. இனி ஆங்கில மொழியைப் பார்ப்போம். ஆங்கிலேயர்கள் தம் மொழியில் இல்லாத சொற்களையே பிற மொழியினின்றும் அப்படியே கடன் வாங்குவர். அதுவும் எல்லாச் சொற்களையும் அப்படியே கடன் வாங்கார். சிலவற்றை வேடிக்கையாக மொழிபெயர்த்துக்கொள்வர். கட்டுமரம் போன்ற சொற்களை ஆங்கிலேயர் அப்படியே எழுத்துப் பெயர்ப்பாகக்i (Transliteration) கொண்டனர். அதே ஆங்கிலேயர்கள் முருங்கைக் காய், வெண்டைக்காய் என்பனவற்றை அப்படியே கொள்ளவில்லை. ட்ரம்ச்டிக் (Drumstick) என்றும், லேடிசுவிங்கர் (Lady’s finger) என்றும் கொண்டனர். ஆனால் அமெரிக்கர்கள் தத்தம் மனம் போனவாறெலாம் புதுச் சொற்களை ஆக்கியும், பிற மொழிச் சொற்களைக் கலந்தும் வருகின்றனர். இச்செயல்கண்டு ஆங்கிலேயர் பெரிதும் வருந்துகின்றனர்.

இன்னும் ஒரு வினா. பழைய மலையாளத்திற்கும் புது மலையாளத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே அவ்வினா. பழைய மலையாளம் ஒரு மொழி, புது மலையாளம் பிறிதொரு மொழி என்றே கூற வேண்டியுளது. தற்கால மலையாளிக்குப் பழைய மலையாளம் கிரேக்கமாகத் தோன்றுகிறது. அது போலப் பழங் கன்னடம் வேறு; புதுக் கன்னடம் வேறு. வடமொழிச் சொற்கள் மிகுதியும் நுழைக்கப்பட்டுவிட்டதால் அம்மொழிகள் உருமாறிப் பிற்கால மக்களுக்குத் தம்முன்னோர் பேசிவந்த மொழியே புரியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.