பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தமிழ்நாடும் மொழியும்


இன்னும் சில சீர்திருத்தங்கள் தமிழின் நெடுங்கணக்கிலே கொள்ளல் ஏற்புடைத்தாம். சீர்திருத்தம் செய்வார் மிகவும் மெதுவாக நன்கு ஆராய்ந்து அறிந்து விரைவின்றிச் சீர்திருத்தம் மேற்கொள்ளல் வேண்டும். ஆத்திரமும், அவசரமும் கொண்டால் பெருங்குழப்பமும் வீண் துன்பமும் ஏற்படும்.

திணை, பால் பாகுபாட்டின் சிறப்பு

பிறமொழிகளுக்கு, குறிப்பாக வடமொழிக்கு இல்லாத சிறப்புக்கள் பல தமிழுக்குண்டு அவற்றுள் திணை, பால் பாகுபாடு ஒன்றாகும். இப்பாகுபாடுகள் பிறமொழிகளிலே அறவே இல்லை என்பதன்று பொருள். அவற்றிலும் இருக்கின்றன. ஆனால் சிறந்த முறையில் இல்லை; அவ்வளவே. தமிழிலே திணை, பால் பாகுபாடு சிறந்த முறையில் உள்ளது. திணை, பால் பாகுபாட்டிற்குத் தமிழைப் பொறுத்தவரையில் பொருளே அடிப்படை. வடமொழியிலோ சொல்லமைப்பே அடிப்படை, பொருளுக்காகச் சொல்லா? சொல்லுக்காகப் பொருளா? இதிலிருந்து விளங்கும் வடமொழித்திணை, பால் பாகுபாட்டின் பொருந்தாமையும், தமிழ்த் திணை, பால் பாகுபாட்டின் சிறப்பும். தமிழிலே திணை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலர்பால் என்பது பால் வேறுபாடு. இத் திணை, பால் பாகுபாடு எழுவாயில் மட்டுமல்ல, பயனிலையிலும் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. ஒரு பயனிலையை மட்டும் கொண்டு ஆங்கில மொழியிலே எழுவாய் எத்திணையைச் சேர்ந்தது என்றோ. எப்பாலினைச் சேர்ந்தது என்றோ காணல் முடியாது. ஆனால் தமிழிலோ வினைச் சொல் பயனிலையாக வருமாயின், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் என்ற ஆறு கூறுகளையும் நாம் கண்டுபிடித்துவிடலாம்.