பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தமிழ்நாடும் மொழியும்


வது. மக்கள் வழக்கிலும் நூல் வழக்கிலும் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களும், பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல் பலவும் பயின்று வருதல் கண்கூடு. ஆனால் உலகியல் வழக்கைவிடச் செய்யுள் வழக்கிலேயே இத்தகைய சொற்கள் மிகுதியும் பயின்று வருகின்றன. அவ்வாறு பயின்று வருவனவே திரிசொற்களாகும். ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள் வருமாறு:- எழிலி, முகில், மஞ்சு, கொண்டல் என்பன கொண்டலுக்கு (Cloud) வழங்கி வரும் சொற்க ளாகும். இனிப் பல பொருள் குறித்த ஒரு சொல் வருமாறு:- கடி என்பது ஒரு சொல். அச்சொல் குறிக்கும் பொருள்களாவன:- காப்பு, கூர்மை அச்சம், காவல், கரிப்பு, விளக்கம், சிறப்பு, மணம்.

வெண்டிரீசர் போன்ற மேலை நாட்டுப் புலவர்கள் இவ்வாறு ஒரு பொருளைப் பல சொற்கள் குறித்தலும், ஒரு சொல்லே பல பொருள்களைக் குறித்தலும் இயற்கையில் இல்லை என்கின்றனர். இது உண்மையே. புகல், கழறு, கூறு, நவில், போன்ற சொற்கள் மேற்போக்காகச் "சொல்” என்ற பொருளிலே தோன்றினாலும், அத்தனை சொற்களுக்குமிடையே காணும் வேறுபாடு உண்மை புலவர்க்குடன்பாடே. புலவர்கள் கழறு, நவில் போன்ற சொற்களைக் குறிப்பிட்ட ஒரு சில இடங்களிலே தான் பயன்படுத்துகின்றனரே தவிர, எதற்கெடுத்தாலும் அவற்றைப் பயன்படுத்தல் இல்லை. கதையைக் கழறினான் என்றோ, விடை புகன்றான் என்றோ பயன்படுத்தல் நல்ல புலவர்தம் செயலன்று. கழறு என்ற சொல்லைப் பயன்படுத்த இடமும் பொருளும் வேறு; புகல் என்பதைப் பயன்படுத்த வேண்டிய இடம் வேறு. ஆனால் இந்த வேற்றுமையைச் சிலர் நெகிழவிட்டமையாலேயே திரிசொல் என்ற புதிய சொல் வகை வகுக்க வேண்டியதாயிற்று.