பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தமிழ்நாடும் மொழியும்


தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் மூன்றினையும் குறித்து இலக்கணம் செய்துள்ளார். ஆனால் பிற்காலத்தில் எழுதிய நன்னூலாரோ பொருள் அதிகாரம் எழுதவில்லை. சிலர் நன்னூலார் எழுதி அது அழிந்துவிட்டது என்பர். பொருளிலக்கண வளர்ச்சியினை நன்னூலார் தம் காலத்துக் கேற்ப எவ்வளவோ சிறப்பாய் எழுதியிருக்கலாம்; ஆனால் எழுதவில்லை.

தொல்காப்பியர் பதவியல் என்று ஒரு தனியியல் வகுக்கவில்லை. அதற்குத் தேவை அப்போதும் இல்லை; இப்போதும் இல்லை. வடமொழியாக்கத்தைத் தொல்காப்பியர் ஒரே நூற் பாவில் கூறிச் செல்லுகிறார். ஆனால் நன்னூலாரோ பல சூத்திரங்கள் சொல்லிக்கொண்டு போகிறார்.

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களைப்பற்றிக் கூறும் தொல்காப்பியர் சகரம் மொழிக்கு முதலில் வராது எனக் கூறுகிறார். ஆனால் நன்னூலார் காலத்தில் வரலாம். இது இலக்கண வளர்ச்சியையே காட்டுகிறது. இதே போன்று ‘நான்' என்ற சொல் பிற்கால வழக்கு. நன்னூல் அதைக் காட்டுகிறது. உயர்திணை மட்டுமே நான் என்று கூறலாம். அஃறிணைப் பெயர்கள் கூறக்கூடாது தொல்காப்பியனார் காலத்தில், ஆனால் நன்னூலார் காலத்தில் அஃறிணைப் பொருட்களும் 'நான்' என்று கூறலாம்.

எழுத்து முறையில் நேர்ந்த மாறுதல்களை நன்னூலார் குறிக்கவில்லை. ஒருவேளை நன்னூலார் காலத்திலும் தொல்காப்பியர் காலத்தில் எழுதப்பட்டவை போன்றே எழுத்துக்கள் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

இவை யாவற்றையும் நோக்கும்பொழுது நன்னூலுக்கும், தொல்காப்பியத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஓரளவுதான் இலக்கண வளர்ச்சியைக் காட்டுகின்றன என்பதும், பேரளவு காட்டவில்லை என்பதும் தெரிகின்றன.