12
தமிழ் நாடும் மொழியும்
களாகும். இவர்கள் தம் வாழ்நாளில் பெரும் பொழுதை உணவு தேடுவதிலேயே கழித்ததால் இவர்களுக்கு ஓய்வென்பதே இல்லை. எனவே இந்நில மக்கள் கல்வியிலோ, கலையிலோ, பண்பாட்டிலோ உயர வழியில்லாமற் போயிற்று.
முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடமுமாகும். இந்நில மக்களாகிய ஆயர்கள் ஆடுமாடுகளை மேய்த்தும், அவை தரும் பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றை விற்றும் வாழ்க்கை நடத்தினர். இவர்களுக்கும் குறிஞ்சி நில மக்களைப் போன்று ஓய்வில்லாததால் இவர்களும் பிற துறைகளில் முன்னேறவில்லை.
கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும். இந்நில மக்கள் காலமெல்லாம் கடலிலே கலம் செலுத்தி மீன் பிடித்து இரவில் வீடு திரும்பியதால் இவர்களும் குறிஞ்சி, முல்லை நில மக்களைப் போன்றே ஓய்வில்லாது உழைத்தனர் என்று சொல்லவேண்டும். ஒன்றும் விளையாத பொட்டல் நிலமே பாலை எனப்படும். இந்நில மக்கள் வழிப்பறி செய்தும் கொள்ளை அடித்தும் வாழ நேரிட்டது.
எஞ்சா வளம் படைத்த நஞ்சைசூழ் நிலப்பகுதியே மருதமாகும். இந்நிலப் பகுதி நீர் வளமும் நில வளமும் சிறக்கப் பெற்றிருப்பதால், இந்நில மக்கள் தங்களுக்கு வேண்டிய எல்லா உணவுப் பொருள்களையும் குறையாது பெற்று மகிழ்ந்தனர். இதே போன்று பருத்தி பயிரிட்டு அழகிய ஆடைகளை நெய்து அணிந்தனர். சுருங்கக் கூறின் இந்நில மக்கள் உணவு, உடை, உறையுள் இம்மூன்றிற்கும் கவலைப்படாது களிப்புடன் வாழ்ந்தனர். இதன் காரணமாய் இம் மக்கள் கவலையற்றவர்களாய், கல்வியிற் கவனம் செலுத்தி, பண்பாடு முதலியவற்றில் சிறந்தோங்கி, கலையுணர்வுடையோராய் உயர்ந்து விளங்கினர்.