பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. தமிழ்மொழி வளர்ச்சி


தோற்றுவாய்

மிழின் தொன்மை காலங் கடந்த ஒன்று. நினைப்பிற் கெட்டா நெடுங்காலத்தையும் கடந்து செல்லுகிறது தமிழின் வரலாறு. அக்காலத்திலிருந்தே தமிழ் படிப்படியாக வளர்ந்தும், தளர்ந்தும், புதிய துறை பலவற்றிற் புகுந்தும் வருகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் தமிழ் வளர்ந்த விதத்தையறியப் போதிய சான்றுகள் இல்லை; கிடைப்பன எல்லாம் அரை குறையாகவே உள்ளன. எனினும் களவியல் உரைமூலம் தமிழ் வளர்ந்த விதம் ஓரளவுக்குத் தெரிகின்றது. அக்காலத்தே தமிழ்ச்சங்கம் பல இருந்தன. அரசர்கள் ஆதரவினாலும், புலவர் போற்றுதலினாலும் தமிழ் வளர்ந்தது. அடுத்து கி.பி.க்கு முன்னர் தமிழ் எப்படி வளர்ந்தது என்பதை அறியத் தெளிவான சான்றுகளாக விளங்குவன சங்க இலக்கியங்களே. சங்க இலக்கியங்கள் அக்காலத் தமிழ் வளர்ச்சியை நன்கு காட்டுகின்றன. தமிழ் இயல், இசை, நாடகம் என்ற முத்துறைகளாகப் பிரிவுற்று வளர்ந்தது. இயலைப் புலவர்களும், இசையைப் பாணர்களும், நாடகத்தைக் கூத்தர், பொருநர், விறலியர் ஆகியோரும் நன்கு காத்து ஓம்பினர். இம் முத்தமிழையும் அவர்கள் வளர்த்துப் பெருக்க அவர்கள் வறுமையால் வாடாமல் இருத்தற் பொருட்டு வள்ளல்களும், குறு நில மன்னர்களும், முடி மன்னர்களும் பொன்னும் பொருளும் பிறவும் வாரி வாரி வழங்கினர். எனவே வயிற்றுக்கவலை இல்லாத பாணரும், புலவரும், கூத்தரும், தமிழை உயிரினும் மேலாகக் கருதி வளர்த்து வந்தனர்.