பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தமிழ்நாடும் மொழியும்


நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். மேலும் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு, தமிழாராய்ச்சி செய்தல், நூல் வெளியிடல், செந்தமிழ் என்ற திங்கள் வெளியீடு வெளியிடல், மாணவர்க்குத் தமிழ்க் கல்வி கற்றுக் கொடுத்தல், தேர்வு நடத்தி அதில் தேறியவர்களுக்குப் “பண்டிதர்" என்ற பட்டம் வழங்கல் முதலிய பணிகளைத் தொடங்கிவைத்தனர். பல பழைய நூல்களையும், ஏட்டுச்சுவடிகளையும் திரட்டி ஒரு நூல் நிலையமும் நிறுவப்பட்டது. வித்துவான் பட்டப் படிப்புத் தொடங்குவதற்கு முன்னர் இச்சங்கம் அளித்த “பண்டிதர்” என்ற பட்டம் பெற்றவர்களே பள்ளிகளில் தமிழாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பல பேராசிரியர்களும், செல்வர்களும், வணிகர்களும், தமிழில் ஆர்வம் மிக்கவர்களும் இச்சங்கத்தின் உறுப்பினர்களாக இன்று விளங்குகின்றனர். இச்சங்கத்தின் பணிகளைச் செயற்குழு ஒன்று மேற்பார்த்து வருகிறது. இச்சங்கத்தின் தலைவர் திரு. சண்முகராசேசுவர சேதுபதியாவார். திரு. பி. டி. இராசன் அவர்கள் துணைத் தலைவராக விளங்குகின்றார். திரு. சண்முகசுந்தரம் அவர்கள் இதன் செயலராவர். செந்தமிழ்க் கல்லூரி ஒன்று இச்சங்கத்தினரால் தொடங்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகின்றன. வித்துவான் பட்டப் படிப்பிற்குரிய முதல் நிலை, இடைநிலை, இறுதிநிலை ஆகிய மூன்று வகுப்புக்களும் உள்ளன. திரு. கி. பழனியப்பன் அவர்களைச் செயலராகவும், திரு. பேராசிரியர் இரா. வே. நாராயணன் அவர்களை, முதல்வராகவும் கொண்டு இக்கல்லூரி சிறந்த முறையில் பணியாற்றுகிறது. தமிழிசையைப் பரப்ப வேண்டி திரு. இல. நாராயணன் செட்டியார் தலைமையில் குழு ஒன்று இதன் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளியிடும் செந்தமிழ் தமிழ் மாணவர்க்கு நல் விருந்தாகும்.