பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

229


கத் தமிழர்க்குத் தமிழ் ஆர்வத்தை ஊட்டியது. சில ஆண்டுகள் தொண்டாற்றிப் பின்னர், இச்சங்கமானது மறைந்தது. மறையாது நிலைத்து நிற்பவற்றுள் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையும், நெல்லைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் குறிப்பிடத் தக்கனவாகும். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையினைத் தொடங்கிய பெருமை திரு. பழனியப்பச் செட்டியார் அவர்களைச் சாரும். இவரது தோன்றலாகிய திரு. சாமிநாதச் செட்டியார் அயராது இச்சங்கத்தின் நலனுக்கு உழைத்து வருகிறார். இச்சபையின் சார்பில் புலவர் கல்லூரி ஒன்று நடத்தப்பெறுகின்றது. நெல்லைத் தமிழ்ப் பெரியார் பலருடைய முயற்சியினால் தென்னிந்தியச் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகமானது தோன்றியது. இன்று இக்கழகமானது தமிழகத்தில் தலைசிறந்த பதிப்பகமாக விளங்குகின்றது; பழம் பெரும் தமிழ்நூல்களையும் புதிய நூல்களையும் அழகிய முறையில் அச்சிட்டுத் தருகின்றது. சைவசித்தாந்த மகாசமாசம் கி. பி. 1906இல் சென்னையில் பலருடைய முயற்சியால் நிறுவப்பட்டது. பல இடங்களில் சமாசக் கூட்டங்களை நடத்திச் சமயவுண்மைகளைப் பரப்பியும், சித்தாந்தம் எனும் திங்கள் இதழை வெளியிட்டும் தமிழ்த் தொண்டு புரிந்து வந்த இச்சங்கம் சிறிது காலம் தளர்வுற்றுப் பின் தளிர்த்து இன்று மறைந்துவிட்டது. பன்னிரு திருமுறைகளையும், பதினான்கு சைவசித்தாந்த சாத்திரங்களையும், திருப்புகழையும், சங்க இலக்கியங்களையும் இக்கழகம் அழகிய முறையில் வெளியிட்டு அடக்க விலைக்கே மக்களுக்கு வழங்கியமை என்றும் மறக்கற் பாலதன்று. தமிழர் பழங்கலை யாராய்ச்சிக் கழகம் (Tamilian Antiquarian society) திருச்சிராப்பள்ளியில் பல்லாண்டுகட்கு முன்னர் பண்டிதர் டி. சவுரிராயர் அவர்களின் பெரு முயற்சியால் தோன்றியது. இக்கழகச் சார்பில் நடத்தப் பெற்ற தமிழர் தொன்மை தொகுப்போன் (Tamilian Antiquary) என்ற இதழ் தமிழர் நாகரிகம், பண்பாடு