பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

232


வளர்க தமிழ்

உலக மொழிகளிலே செம்மொழிகள் என ஆன்றோரால் அழைக்கப்படுவன ஐந்து. அந்த ஐந்தனுள்ளே தமிழ் மொழியுண்டு. தமிழ்மொழியிலே பல இலக்கியங்கள் உண்டு. தமிழ் மொழிக்கு மூவாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட வரலாறுண்டு. தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கணச் செறிவும் தொன்மைச் சிறப்பும் உடைய ஒரு மொழிதான். ஆனால் இன்றையத் தமிழ் மொழியின் நிலையென்ன? நமக்கு அறிவு புகட்டப் பயன்படுகின்ற மொழி எது? நம்மை ஆள்வது எது? தமிழா? அன்று, அன்று. ஏன் இந்த நிலை? ஆங்கிலம்தான் இன்று நம்மை ஆள்கிறது. ஆங்கிலத்திற்கில்லாத தொன்மைச் சிறப்பு தமிழுக்குண்டு. அம்மொழிக்கில்லாத இலக்கிய வளம் நம் மொழிக்குண்டு. அம்மொழி பெற்றிடாத இலக்கணங்கள் நம் அருமை மொழிக்குண்டு. இருந்தும் தமிழால் நம்மை ஆள முடியவில்லை. ஆங்கிலத்தின் இத்துணைச் சிறப்புக்குக் காரணம் ஆங்கிலத்திலே அறிவியல் நூல்களும், பிற கலை நூல்களும் இன்று எத்தனையோ ஆயிரம் பெருகியுள்ளமையே. ஆங்கிலத்திலே தேனிக்களைப் பற்றி மட்டும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் உண்டாம். ஆனல் தமிழிலோ? வாய்மூடி மெளனியாக வேண்டியுள்ளது. எனவே இனி நாம் செய்யவேண்டியது என்ன ? தமிழை வளர்க்கவேண்டும். எப்படி? அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கக் கூடாது.


மண்ணையும் விண்ணையும், காற்றையும் ஊற்றையும், கனலையும் புனலையும், காட்டையும் கழனியையும், கடலையும் உடுக்களையும் பற்றி அழகான சொற்களிலே அற்புதமாகப் பாடினால் மட்டும் போதாது. தமிழ் வளராது. மாருகக் கடல் நீரைப்பற்றி, அதன் தன்மையைப் பற்றி ஓராயிரம் நூல்கள் வேண்டும்.