பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

235


மேலும் ஒரு பெருங்குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் இரு உட் குழுக்கள் அமைக்க வேண்டும். உட் குழுக்களில் ஒன்று உலக நாடுகள் அத்தனைக்கும் செல்லவேண்டும். அங்கங்குள்ள பெரு மன்றங்கட்குச் சென்று தமிழின் அருமை பெருமைகளை அந் நாட்டார் அறிந்து போற்றும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். அஃதோடு அந் நாட்டுப் பல்கலைக் கழகங்களிலே, தமிழ் கற்க, தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். மற்ருெரு குழு உள் நாட்டிலே பட்டி தொட்டிகளுக்கும், மூலை முடுக்கு களுக்கும் சென்று சொற்பொழிவு வாயிலாகவும், தனி வகுப்புக்கள் வாயிலாகவும் மக்கட்கு தமிழறிவைப் புகட்டல் வேண்டும்.

மேற்கூறிய அத்தனை பணிகளையும் செய்ய வேண்டுமானால் தாய் நாட்டை ஆளும் ஆட்சியாளரின் ஆதரவும் அன்பும் வேண்டும். அதற்கு வழி நாட்டாச்சி தமிழில் நடைபெறவேண்டும். எனவே சட்ட மன்றத்தில், நீதி மன்றத்தில், கல்வி நிலையங்களில் எங்கும் தமிழ் கோலோச்ச வேண்டும். தமிழே படிக்கா வண்ணம் உயர்கலைப் பட்டம் பெறுவதற்கு இன்றையத் தமிழகத்திலே, கல்லூரிகளிலே வாய்ப்பு இருக்கிறது. அது நீக்கப்பட வேண்டும். இத் திட்டங்களை ஏட்டிலே இருந்து நாட்டிலே நடைமுறைக்குக் கொண்டுவந்தால்,

“முத்தமிழும் விரிவடையும் முயற்சியும்
நற்பயன் அளிக்கும் முகமலர்ந்து மெத்தவும்
நம் தமிழன்னை யகங் குளிர்வாள்
தமிழ் நாடும் விளங்கு மன்றே !”

அந்நாளே தமிழுக்கு ஓர் நன்நாள்; பொன்நாள். அந்நாள் என்று வருமோ?

வாழ்க தமிழ் நாடு !

வளர்க தமிழ் !