பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

25


தியர், நிதியின் கிழவன், முரஞ்சியூர் முடி நாகராயர் முதலியவராவர். இக்காலத்தெழுந்த நூல்கள் அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலியனவாம். இச் சங்கத்தின் கடைசி அரசனான கடுங்கோன் காலத்தில் ஒரு பெருங் கடல்கோள் ஏற்பட்டு முதற்சங்கம் அழிந்துவிட்டது.

இடைச் சங்கம்

முதற் சங்கத்தினை முந்நீர் விழுங்கிவிடவே, அடுத்து ஏற்பட்டது இரண்டாம் சங்கமாகும். இச்சங்கம் இருந்த நகரம் கபாடபுரமாகும். இந்நகர் பற்றிய குறிப்பு வான்மீகியின் இராமகாதையில் வருவதாகக் கூறுவர். இதிலே இருந்த இன் தமிழ்ப்பாச் செய்த புலவர்கள் 449 பேராவர். இச்சங்கத்தினைத் தோற்றுவித்தவன் வெண்டேர்ச்செழியனாம். இச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் தொல்காப்பியராம். இச்சங்கத்தின் இறுதி அரசன் நிலந்தருதிருவிற் பாண்டியன். இச்சங்க காலத்தில் எழுந்த நூற்கள் இசை நுணுக்கம், தொல்காப்பியம், வியாழமாலை அகவல், தொகைநூற் பாடல்களில் சில முதலியவாம். இந்தச் சங்கமிருந்து தமிழ்த் தொண்டு செய்தவர்கள் தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழியார், மோசியார், வெள்ளூர்க்காப்பியனார், சிறு பாண்டரங்கனார் முதலிய பல புலவராவர். இந்த இடைச் சங்கமும் கடல்கோளால் அழிந்தது.

மூன்றாம் சங்கம்

உலக அரங்கிலே நமக்கு ஏற்றத்தையும், இலக்கிய மாளிகையிலே தமிழன்னைக்குத் தனிச் சிறப்பையும், நொந்த நந்தம் சிந்தையிலே செந்தமிழ்த் தேனையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்ற எட்டுத் தொகை முதலிய இலக்கியங்களை ஈன்றெடுத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. இக்காலம்