பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

29


முந்திய நூலாகும். பாணினியின் காலம் கி. மு. 300 என்பர் டாக்டர் பந்தர்க்கார். எனவே கி.மு. 300க்கு முந்தியது ஐந்திரவியாகரணம். அஃது கி.மு. 500-இல் தோன்றியதாக இருக்கலாம். எனவே கி. மு. 500க்கும் - 300க்கும் இடைப்பட்ட காலம் தொல்காப்பியர் காலமாகும் என ஒருவாறு கூறலாம்.

பழந்தமிழர் நாகரிகம்

பழந்தமிழர் நாகரிகத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் நமக்குப் பேருதவி செய்கிறது. பண்டை மக்களது வழக்கங்கள், நடை, உடை, பாவனை முதலியவைகள் தொல்காப்பியத்திலே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

பொருட்கு விரிவாக இலக்கணம் வகுத்துள்ள தொல்காப்பியர் பொருளை அகப்பொருள், புறப்பொருள் என இருவேறு பெரும்பிரிவு செய்துள்ளார். இவற்றுள் அகப்பொருள் என்பது அகத்து நிகழும் ஒழுக்கத்தைச் சொல்லுவதாகும். புறத்தே நிகழும் ஒழுக்கத்தைக் கூறுவது புறப்பொருளாகும். தலைவன் தலைவியரது அகத்து நிகழும் இன்பம் அகப்பொருளாகும். அறத்தினையும் பொருளையும் வெளிப்படையாகவும், வீட்டினைக் குறிப்பாகவும் உணர்த்துவது புறப்பொருள் ஆகும். புறவொழுக்கங்கள் பலவற்றிற்குக் காரணமானதும், அவற்றுளெல்லாம் சிறந்ததும் ஆகிய அரசரது ஒழுக்கமே புறப்பொருளிற் பெரிதும் பேசப்படுகின்றது.

முதலில் அகம் என்பதன் இலக்கணத்தையும், அதன் பிரிவாகிய ஏழ் திணைகளையும், அவற்றின் முதல், கரு, உரிப் பொருள்களையும் பார்ப்போம்.