சங்க காலம்
31
தெய்வத்தால் எதிர்ப்பட்டு, மனம் ஒன்றுபட்டு, தம்முட் கூடிக் கலத்தலாகும். இவர்களது களவொழுக்கத்திற்குத் துணைபுரிவோர் பாங்கன், பாங்கி, செவிலி முதலியோராவர்.
களவொழுக்கத்திற்குப் பின்னர் முறைப்படி திருமணஞ் செய்துகொண்ட தலைவனும் தலைவியும் அறவழியே நின்று இனிய இல்லறம் நடத்துவது கற்பொழுக்கமாகும். இவ்வொழுக்கத்தின்கண், கல்வி கற்றல், நாடு காத்தல், தூது போதல், வேந்தர்க்கு உதவி செய்தல், பொருளீட்டல், பரத்தை விருப்பு ஆகிய இவற்றின் காரணமாய் தலைவன் மனைவியைப் பிரிய நேரிடும். அதுகால் தலைவி பிரிவுத் துன்பத்தை ஆற்றாது ஆற்றி இருப்பாள். ஆடவர் மகளிரொடு கடன்மேற் செல்லுதலும், பாசறைக்கண் அவர்கள் மகளிரொடு இருத்தலும் அன்று கடியப்பட்டன.
தலைவி கருவுற்றிருக்குங்கால் தலைவன் பரத்தையிடம் செல்லுதலும், அதன் காரணமாய் தலைவி வருந்தி ஊடுதலும், அவ்வூடலைத் தணிக்கும் வாயில்களாக, தோழி, இளையர், அறிவர், கூத்தர் முதலியோர் விளங்கினர் என்பதும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது. மேலும் காம இன்பத்தினை வேண்டுமளவு நுகர்ந்த பின்னர் தலைவனும் தலைவியும் இறுதியில் வீடு பெறுதற் பொருட்டுத் துறவினை மேற்கொள்ளுவர் எனவும் தொல்காப்பியம் கூறுகின்றது. அடுத்து புறத்திணையைப் பற்றிப் புகலுவாம்.
அகப்பொருளுக்கு ஏழு திணைகள் கூறியதுபோலவே தொல்காப்பியர் புறப்பொருட்கும் ஏழு திணைகள் கூறுகின்றார். அவை யாவன :
1. வெட்சித் திணை - பகைவரது நிரையைக் கவர்தல். நிரை மீட்டலும் இதன் கண்ணே அடங்கப்பெறும்.