பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தமிழ் நாடும் மொழியும்


பாரி என்பவன் பறம்பு நாட்டை ஆண்ட வள்ளல். இவனோடு நட்புப் பூண்டு ஒழுகியவர் கபிலராவர். இவன் வறியவர்க்கும் அறிஞர்க்கும் வரையாது வழங்கிய வள்ளல் ஆவான். இவனையே முடியுடை மூவேந்தர் எதிர்த்தனர். காரி என்பவன் வீரத்திலும் கொடை ஈரத்திலும் சிறந்தவன். பேகன் என்பவன் பழனிமலைப் பகுதியை ஆண்டவன். மயிலுக்குப் போர்வை தந்தவன். இவ்வாறே ஓரி, நன்னன், அதியமான், நள்ளி முதலிய வள்ளல்களும் தம் வண்மையால் நாளும் புகழ்பரப்பி வாழ்ந்தனர்.

மக்கள்

பண்டைத் தமிழகத்திலே மக்கள் தம் தொழில் பற்றிப் பிரிக்கப்பட்டார்களே தவிர வர்ணாசிரம தருமப்படி பிரிக்கப்படவில்லை. தமிழர்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தனர். மலைப்பகுதி குறிஞ்சி எனவும், காட்டுப்பகுதி முல்லை எனவும், ஆற்றுப்பகுதி மருதம் எனவும், கடற்கரைப்பகுதி நெய்தல் எனவும், வளங்குன்றிய பகுதி பாலை எனவும் வழங்கப்பட்டன . குறிஞ்சி நிலத்தவர் குறவர்; முல்லை நிலத்தவர் ஆயர்; மருத நிலத்தவர் வேளாளர்; நெய்தல் நிலத்தவர் பரதவர்; பாலை நிலத்தவர் வேடர், மறவர். மேற்குறித்தவாறு நிலத்தை ஐவகையாகப் பிரித்த தமிழ் மக்கள், அவற்றிற்கேற்ப ஐவகைப்பட்ட அகவொழுக்கம் வகுத்து, அதனை ஐந்திணை என்று பெயரிட்டழைத்தனர்.

காதல் வாழ்வு பெரிதும் மதிக்கப்பட்டது. தமிழ் மக்கள் அறத்தைப் பெரிதும் போற்றினர். பொருளீட்டலுக்கும், இன்பம் பெறுவதற்கும் அறத்தின் உதவியினையே நாடினர். தமிழர்கள் வீரஞ்செறிந்தவர்களாகத் திகழ்ந்தனர். நாட்டுக்