பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

41


காக, மன்னனுக்காக உயிரைக்கொடுக்கும் எண்ணம் உள்ளவர்களாய் வாழ்ந்தனர். ஆடவர்போலவே பெண்டிரும் தறுகண்மை உடையவர்களாய் வாழ்ந்தனர்.

பண்டைத்தமிழர் இயற்கைப் பொருள்களையே தெய்வங்களாக வழிபட்டனர். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்; முல்லை நிலக் கடவுள் மாயோன்; மருதநிலக் கடவுள் இந்திரன்; நெய்தற் கடவுள் கடற்றெய்வம்; பாலை நிலக் கடவுள் கன்னி. குழலும், முழவும், யாழும், பறையும் கடவுள் வழிபாட்டின்கண் ஒலித்தன.

உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கின. கைத்தொழிலில் சிறந்து விளங்கியது நெசவுத்தொழிலே. பருத்தி, ஆட்டுமயிர், எலி மயிர் முதலியன கொண்டு மக்கள் ஆடைகளை நெய்தனர். ஆடைகள் மிக நுட்பமாக நெய்யப்பட்டமையால் அவைகள் புகையைப்போலவும், பால் நுரையைப்போலவும் சிறந்து விளங்கின. கன்னார், தச்சர், கப்பல் கட்டுவோர், பொற் கொல்லர், இசைக்கருவிகள் செய்வோர் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளரும் பண்டு தமிழகத்தில் நன்கு விளங்கினர்.

ஒழுக்கமே மக்கட் பண்பு என்பது தமிழர் கொள்கையாதலால் ஒழுக்கம் உயிரினும் அதிகமாகப் போற்றப்பட்டது. “தீதும் நன்றும் பிறர் தரவாரா” “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் தமியர் உண்டலும் இலமே" போன்ற உயர்ந்த கொள்கைகளைச் சங்ககால மக்கள் பொன்னேபோற் போற்றி ஒழுகினர்.

பண்டு தமிழ்மக்கள் வீரஞ்செறிந்தவராகவும், காதல் கனிந்தவராகவும், கடமை உணர்வுடையோராகவும், பண்பு நலன்கள் அனைத்தும் கொண்டவராகவும் விளங்கினர்.