பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

47


மருத நில மக்களுக்குக் கொடுத்து நெல்லைக் கொண்டு செல்லுவர். எனவே சங்ககாலத்திலே பொருளியல் வளம் செறிந்த நிலம் மருதநிலமாகும்.

போர் முறை

இக்காலத்திலே நடக்கும் போர் அறம் திறம்பிய போராகும். ஆனால் சங்ககாலத்திலோ போர் அறவழியிலேயே நடைபெற்றது, முன்னறிவுப்புடனேயே போர் நடைபெற்றது. போர் செய்ய விரும்புவோர் முதலிலே பகைவர் நாட்டகத்தே சென்று பறையறைவர். பிள்ளை பெறாதவரும், பிணியுடையோரும், பார்ப்பனரும், பிறரும் தத்தம் புகலிடம் நோக்கிப் போகுமாறு கூறி, அங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இஃதறிந்த பிற நாட்டார் ஆநிரைகளை மீட்கப் போருக்கு வருவர். உடனே போர் தொடங்கும். போரிலே புறமுதுகிட்டோடலும், அவ்வாறு ஓடுவார் மீது படை ஓச்சலும் தவறு எனக் கருதப்பட்டன. ‘போர்க் குறிக் காயமே புகழ்க்குறி காயம்' என்பது பன்டைத்தமிழ் வீரர்களின் இதய நாதமாகும். போரில் இறந்தோருக்கு நடுகல் நடுவது வழக்கமாம். போரில் புண்பட்டோர் வடக்கிருந்து உயிர் நீத்தலும் அக்காலத்தில் உண்டு.

கலைகள்

சங்ககாலத் தமிழகம் கலை நலத்தால் கவினுற விளங்கியது. சிற்பத்தால் சிறந்தும், ஓவியத்தால் உயர்ந்தும், இசையால் இனிமை பெற்றும் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். முத்தமிழ் முழக்கம் வீதிதோறும் கேட்டது. இசைத்தமிழ் சங்க காலத்தில் நன்கு போற்றப்பட்டது. பெருநாரை, இசை நுணுக்கம் முதலிய இசைத்தமிழ் இலக்கண நூல்களும், சிலப்பதிகாரம் போன்ற இசைத்தமிழ்ச் செய்யுள் நூல்களும் சங்க காலத்தில் எழுந்தன. குரல், துத்தம், கைக்கிளை, உழை,